சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை சந்திரபாகு அவென்யூவில் 8 அடுக்கு தளங்களை கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் வணிக வளாகத்தின் 8-வது மாடியின் மேல்தளத்திலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் ஒரு பெண் திடீரென்று கீழே குதித்தார்.

இதை பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் ஓடிச்சென்று அந்த பெண்ணை பார்த்தனர். கை, கால்கள் முறிந்த நிலையில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பிணமாக கிடந்தார்.

8-வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்து இறந்த சம்பவம் வணிக வளாகம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. அதையடுத்து ஊழியர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

இந்த நிலையில் மாடியில் இருந்து கீழே குதித்த பெண் அதே வணிக வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ராஜலட்சுமி (வயது 24) என்றும், சென்னை அயனாவரம் வசந்தகார்டன் தெருவைச் சேர்ந்த செல்வம்-செந்தாமரை செல்வி தம்பதியினரின் ஒரே மகள் என்றும் தெரிய வந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ராஜலட்சுமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலைத்தொடர்ந்து ராயப்பேட்டை காவல்துறை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் போலீசாருடன் விரைந்து வந்து ராஜலட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராஜலட்சுமியின் தந்தை செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகள் சில நாட்களாக யாரிடமும் பேசாமலே மவுனமாகவே இருந்தார். இது குறித்து அவளிடம் பல முறை கேட்ட போதும் பதில் கூற மறுத்து விட்டாள். நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றாள். அலுவலகம் சென்ற சிறிது நேரத்திலேயே எனது மகள் அலுவலகத்தின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அவள் இறந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறு செல்வம் கூறினார்.

இந்த தற்கொலை பற்றி காவல்துறையினர் கூறும்போது, “ராஜலட்சுமி சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று அவருடைய அலுவலகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை பற்றிய முழு விவரமும் கிடைக்கவில்லை. அலுவலத்தில் ஏதேனும் பிரச்சனையா? அல்லது காதல் பிரச்சனையா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *