shadow

120411_1136_CT_MSM

தற்கொலைகள் தொன்றுதொட்டு நிகழ்பவை – மனிதன் தோன்றிய நாளிலிருந்து, தானே தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுவதும் நடந்தே வந்திருக்கிறது.

சமீபத்தில் இந்தியாவில் அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன – அதுவும் மாணவப் பருவத்தினர் உயிரை மாய்த்துக் கொள்ளுவது மனத்தை இறுக்குவது. தற்கொலை என்பது ஒரு வியாதி என்பதையும், அதுகுறித்த தவறான எண்ணங்கள் மக்களிடையே நிலவுவதையும் நாளிதழ் ஒன்றில் மிக அழகாகக் கூறியுள்ளார் மருத்துவர் காட்சன். அவருக்கு நம் வாழ்த்துக்கள்!

சின்ன வயதில், எங்கள் தெருவில் நிகழ்ந்த ஒரு தற்கொலை பற்றி என் பாட்டியும், மாமியும் ரகசியமாகக் கிசுகிசுத்தவை (குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதாம்!) அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லை. கணவன் மீது சந்தேகம் என்ற தொனியில் ஒரு கருத்து மங்கலாக நினைவில் நிழலாடுகிறது!

பாண்டிச்சேரி லாட்ஜ் ஒன்றில் விஷம் குடித்து (பீருடன்கலந்து குடித்ததாகத் தகவல்)  தற்கொலை செய்து கொண்ட ஒரு டாக்டரை நான் அறிவேன். எப்போதும் அமைதியாக, எல்லோருடனும் நட்புடன் எங்களுடன் வலம் வந்தவர்- ஒருவார இறுதியில் இப்படி வாழ்வை முடித்துக் கொண்டார். நிதி நிலையால் ஏற்பட்ட மன அழுத்தம்?

தங்கியிருந்த ஹாஸ்டலில் ஒரு நர்ஸ் – வயது 25க்கும் குறைவு– இரவில் கயிற்றில் தொங்கி விட்டார். ஒரு நாற்காலியின் முன், கழுத்தில் கயிறுடன் , நாக்குத் தொங்கியபடி, கழுத்து ஒரு புறமாகச் சரிந்தபடி…பார்க்க சகிக்கவில்லை. ‘சார், இந்தப் பேஷண்டுக்கு ஊசி வேணாமாம் – பயமாம் சார்’ என்று முதல் நாள் பேசியவள், பயமின்றி மறுநாள் இப்படி! ‘இந்தக் காதல் வேண்டாம், சரியா வராதுன்னு அப்பவே சொன்னேன் சார் அவகிட்ட’ என்றாள் அவள் தோழியான இன்னொரு நர்ஸ். கல்யாண மாலை விழ வேண்டிய கழுத்துக்கு சுருக்குக் கயிறை தேர்ந்தெடுத்துக் கொண்டாள் அவள்.

DR_Baskaran2

என் நெருங்கிய நண்பன் ஒருவன் வீட்டுப் பிள்ளை, பைபோலார் மன நிலையில், அதிக அளவில் தானும் வருந்தி, பெற்றோரையும், உறவினர்களையும் வருத்தி கொண்டிருந்தவன், இறுதியில் சமையலறையில் கயிற்றில் தொங்கியே விட்டான் – அப்போது அவனுக்கு 19 வயது.

கலை உணர்வு உடையவர்கள் – ஓவியர்கள், ஆர்கிடெக்ட்ஸ், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. மொத்த இறப்புகளில், 1.2% தற்கொலைகள் என்றால், மொத்த தற்கொலைகளில் 2.1% இசைக் கலைஞர்கள் என்கிறது ஓர் ஆய்வு !

பிரபல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது சினிமா ஆரம்பித்த காலம் தொட்டே தொடர்ந்து வருவது!  எல்லாம் வாழ்வின் சோகங்களினால் வந்த மன இறுக்கங்கள்– ‘சிக் மைண்ட்’ எனும் நோயுற்ற மனதும், மூளையும்!

புகழின் உச்சியில் இருந்துவிட்டுப் பின்னர், தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டு, தற்கொலை செய்து கொள்வது மர்லின் மன்ரோ முதல் சில்க் ஸ்மிதா வரை பொதுவானது. படாஃபட் ஜெயலட்சுமி, ’ஊர்வசி’ ஷோபா, மோனல், திவ்ய பாரதி, பிரத்யுஷா, கோழிகூவுது விஜி, மயூரி, கல்பனா, நடிகர் குணால், சுரேஷ், பாலமுரளி மோகன், என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது – எல்லோருக்கும் வயது 18முதல் 40க்குள்! காதல் தோல்வி, பணப்பிரச்சினை, தீராவியாதிகளின் வலி, ஏமாற்றம், புகழின் சரிவு, மது, போதை பொருட்களுக்கு அடிமை என்று பல காரணங்கள் !

குழந்தையைக் காணவில்லை என்ற வருத்தத்தில், உயரத்திலிருந்து கீழே குதித்து, அதிர்ஷ்டவசமாகத் தப்பித்த ஒரு பெண், ‘ஒரு மைக்ரோ செகண்டில் ஏதோ ஒன்று என்னைக் குதிக்கச் சொல்லியது’ என்றாள் ! அந்தநொடியைத் தாண்டிவிட்டால், திரும்ப தற்கொலை எண்ணம் வருவது அரிது.

மன அழுத்தம், பைபோலார் டிஸார்டர், போதைப் பொருள் பழக்கம், மரபு வழி மனப்பிறழ்வுகள் எனப் பல காரணங்கள் – காரணம் ஏதுமின்றி ‘செத்துப் போயிடலாம் என்று தோன்றுகிறது டாக்டர்’ என்று ஒருவர் சொன்னால், மரபுவழி மன அழுத்தத்தின் உச்சக்கட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும் –தவறினால் பத்தாவது மாடியிலிருந்து குதித்தோ, மூட்டைப்பூச்சி மருந்து குடித்தோ, கழுத்தில் சுருக்குடனோ மறுநாள்ஆபிட்சுவரியில் வந்து விடும் அபாயம்  அதிகம்.

சாவைப் பற்றி அதிகம் பேசுவது, எழுதுவது, கத்தி, அறுவாள் போன்ற ஆயுதங்களைத் தேடி வைத்துக்கொள்வது, சில மருந்து வகைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வது – இவை தற்கொலை முயற்சிக்கு ஆரம்ப நிலையாக இருக்கக் கூடும். மதுப்பழக்கம் உள்ளவர்கள், முன்னரே தற்கொலை முயற்சி செய்திருந்தவர்கள், குடும்பத்தில் தற்கொலைகள், மனப்பிறழ்வுள்ளவர்கள் – இவர்களுக்கு தற்கொலைத் தாகம் அதிகமாக இருக்கலாம்!

தீரா வியாதிகள் – கேன்சர், தாளமுடியாத வலி, போன்றநோய்கள் ஒருவரை விரக்தி அடையச் செய்து, தற்கொலையில் முடியலாம்.தற்கொலை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான் – தவிர்க்க முடியாத மனநிலையில், திடீரென்று தோன்றும் மனப்பிறழ்வுகளை இனங்கண்டு சிகிச்சை அளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

சிலர், தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பர் – நிச்சயம் இறக்க மாட்டோம் என்று தெரிந்தும், மற்றவர்களைத் தன் நோக்கித் திருப்பும் முயற்சியாக இதனைச் செய்யக் கூடும். SUICIDAL ATTEMPT OR THREAT  என்று இதனைக் கூறுவர். இவர்களும் மனப்பிறழ்வு உடையவர்களே – கவனம் தேவை.

‘இறந்தவர்’ விடுபட்டு விடுகிறார் – இருப்பவர்கள் தான், அதன் வேதனையையும், வருத்தத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.எல்லாத் தற்கொலைகளுக்கும் ஏதாவது ஒரு சாயம் பூசி, இறந்தவர்களையும், உயிருடன் இருப்பவர்களையும் குற்றம் கூறிக்கொண்டிருப்பது கூட ஒரு வகை மனோவியாதியோ எனத் தோன்றுகின்றது!

Leave a Reply