ஒரே ஒரு வார்த்தைக்காக 25 வருடங்கள் காத்திருந்த நளினி – முருகன்

naliniமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியாகவுள்ளது. ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் வெளியாகும் இந்த புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புத்தகத்தை தொகுத்து வழங்கும் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்த புத்தகம் குறித்த ஒருசில முக்கிய தகவல்கள் குறித்து முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகளில் முக்கியமானவர் ரகோத்தமன். சி.பி.ஐ. தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த அவர் சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் சாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அவர் சாந்தனுக்கு கடிதம் எழுதக் காரணம், 2009-ம் ஆண்டு “ராஜீவ்கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்” என்று ரகோத்தமன் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதில், ஹரிபாபு கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட 10 படங்களில் சிலவற்றை ரகோத்தமன் பயன்படுத்தி இருந்தார். அந்தப் படங்களில் ஒன்றில், ராஜீவ் காந்தியின் முகத்துக்கு நேரே ஒருவர் கையை நீட்டிக் கொண்டு நிற்பார். அந்த நபர்தான் தற்போது கைது ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் சாந்தன் என்று ரகோத்தமன் குறிப்பிட்டு இருப்பார். ஆனால், உண்மையில் அது தவறான செய்தி. அந்த நபர் சாந்தன் இல்லை. இந்த விபரம் சிறையில் இருக்கும் சாந்தனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, சிறையில் இருக்கும் சாந்தன் வழக்கறிஞர் புகழேந்தி மூலம் சி.பி.ஐ. தலைமைப் புலனாய்வு முன்னாள் அதிகாரி ரகோத்தமனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், “ஹரிபாபு புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு ஒருவர். அந்த நபர் தான் இல்லை. சம்பவ இடத்தில் நிற்கும் யாரோ ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, அது நான்தான் என்று சொன்னது உண்மைக்குப் புறம்பானது. இதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவதூறு வழக்குத் தொடருவேன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு பதில் எழுதிய ரகோத்தமன், “அந்தப் புத்தகம் அப்போது கிடைத்த தகவல்களின்படி எழுதப்பட்டது. அதில் வேறொருவரின் புகைப்படத்தை வைத்து, அது நீங்கள்தான் என்று குறிப்பிட்டது, உங்களை வேதனை அடைய வைத்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலையை பூஞ்சோலையாக மாற்றிய உங்களின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உங்களோடு சிறையில் இருக்கும் முருகன், திருமதி நளினியை நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தக் கடிதத்தைப் சாந்தனிடம் இருந்து வாங்கிப்படித்த முருகன், தாரை தாரையாக கண்ணீர் சிந்தினார். அதுபற்றி முருகனிடம் கேட்டபோது, “திருமதி நளினி என்ற ஒற்றை வார்த்தைக்காக எத்தனை ஆண்டுகள் போராட்டத்தை இந்தச் சிறைச்சாலைக்குள் நடத்தி இருக்கிறேன். எத்தனை நாள்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். வழக்கு ஆவணங்கள், தடா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ரகோத்தமன் 2009-ம் ஆண்டு எழுதிய புத்தகம் என அனைத்திலும் மிஸ்.நளினி என்றுதான் இருந்தது. அதை திருமதி நளினி என்று மாற்றச் சொல்லி இந்த அதிகாரிகளிடம் எத்தனை முறை மன்றாடி இருக்கிறேன்.அப்போது எல்லாம் அதைச் செய்யாமல் பிடிவாதமாக இருந்தவர்களில் இந்த அதிகாரி ரகோத்தமனும் ஒருவர். இன்றைக்கு அவரே திருமதி நளினி என்று அவர் கைப்பட எழுதி உள்ளார். அதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *