வங்க கடலில் உருவான பைலின் புயல் இன்று மாலை சுமார் 7 மணி அளவில், மணிக்கு 205 – 215 கி.மீ வேகத்தில் ஆந்திர மற்றும் ஒடிஸா கடலோர பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிக கடுமையாக தாக்கும் என எதிர்பார்க்கப்படும் பைலின் புயல் கரையை கடக்கவிருப்பதால் பாதிப்புள்ளாகும் பகுதிகளில் இருந்து சுமார் 1.2 கோடி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளனர்.

இப்புயல் நேற்று ஒடிஸா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது.

புயல் நிலப்பகுதியை நெருங்கி வருவதால் நேற்று காலை முதலே ஒடிஸா கடலோர பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கி, பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் அனைவரையும் அச்சுறுத்தும் இந்த பைலின் புயல், இன்று மாலை சுமார் 7 மணி அளவில் ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கும், ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கோபால்பூரின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படத்தில் இந்த புயல் சின்னம், இந்தியாவின் பரப்பளவில் பாதி அளவிற்கு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply