shadow

rajapakseமூன்றாவது முறையாக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ராஜபக்சே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆறு ஆண்டுகாலம் பதவி வகிக்கக்கூடிய இலங்கை அதிபரின் பதவியில் தற்போதைய அதிபர்  ராஜபக்சே கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி பெற்றதால் அவரது செல்வாக்கு உயர்ந்தது. இதனால் 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபர் பதவியை ஏற்றார்.

இலங்கை அரசு சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் இந்த சட்ட வரைமுறையை மாற்றி மீண்டும் தேர்தலில் நிற்க அவர் சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து அனுமதியும் பெற்றுவிட்டார். தற்போது அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்தநிலையில் அதிபரின் முக்கிய கூட்டணி கட்சியான தேசிய பாரம்பரிய கட்சி (ஜே.எச்.யு.) நேற்று முன்தினம் அரசில் இருந்து விலகியது. புத்த பிட்சுகளின் கட்சியான இந்தக்கட்சி விலகியதால், ராஜபக்சேவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசியல் சட்டப்படி, ஆளும் அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்தால் முன்கூட்டியே தேர்தல் நடத்த அதிபருக்கு உரிமை உண்டு. அதன்படி, ராஜபக்சேவின் தற்போதைய பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது.

இதைத்தொடர்ந்து அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் ராஜபக்சே நேற்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 3வது முறையாக தான் போட்டியிடுவதையும் அவர் உறுதி செய்தார். இது குறித்து இலங்கை அரசின் தொலைக்காட்சியில் அவர் உரையாற்றும்போது, ”நான் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். 3வது முறையாக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் பிரகடனத்தில் கையெழுத்து போட்டுள்ளேன். இது ஜனநாயகம் ஆகும்” என்றார்.

அதிபரின் தேர்தல் அறிவிப்பு பிரகடனத்தை பெற்றுக் கொண்டதாக தேர்தல் ஆணையர் மகிந்தா தேஷபிரியாவின் அலுவலகமும் அறிவித்துள்ளது. மேலும், வேட்புமனு தொடர்பான நடவடிக்கைகள் உடனே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 16 மற்றும் 22 ஆம் நாட்களுக்குள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்துக்காக 28 நாட்கள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஜனவரி தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன.

Leave a Reply