shadow

வரலாறு காணாத வெள்ளம். வெளிநாடுகளிடம் உதவி கேட்கிறது இலங்கை
Sri-Lanka-flood-leaves-dozens-dead
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு தலைநகர் கொழும்பு உள்பட இலங்கையின் பெரும்பாலான பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  கனமழை மற்றும் வெள்ளத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, சுமார் ரூ.13,400 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது இலங்கை வெளிநாடுகளிடம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயகே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் 35 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதிகபட்ச உதவியை எதிர்பார்க்கிறோம். வெளிநாடுகள் புனரமைப்புக்கான செலவில் 75 சதவீதத்தை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

புயல் நீர் சேகரிப்புக்கான தாழ்வான பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள்தான், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்றில் ஒரு பங்கு நகர மக்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணம்.

சதுப்பு நிலக்காடுகள் ஆக்கிர மிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டதுதான் வெள்ளத்துக்கு பிரதான காரணம். மீண்டும் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய கட்டுமான விதிமுறைகள் அமல் செய்யப்படும்.

வெளிநாடுகளின் உதவி பெரும்பாலும் கடனாகவும், மானியமாகவும் வரும் என நம்புகிறேன். எனினும், எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களைத் தவிர்க்கக்கூடிய வகையில் நகர்ப்புற கட்டமைப்பு திட்டங்களையும் அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

Leave a Reply