இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டிதுறையை சேர்ந்த செல்வகிருஷ்ணன். ஓவியரான இவர், இலங்கை தலைமன்னார் அருகே பேசாளை கடற்கரையிலிருந்து பைபர் கிளாஸ் மீன்பிடி படகில் புறப்பட்டார்.

நேற்று  ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினார். அங்கிருந்து கடற்கரையோரமாக நடந்து வந்த இவர், முகுந்தராயர்சத்திரம் பகுதியில் சுற்றித் திரிந்தார். இவரை தனுஷ்கோடி போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் செல்வகிருஷ்ணன் கூறியதாவது:-
இலங்கையில் சமீபத்தில் நடந்த வடக்கு மாகாண தேர்தலுக்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு 40 பேர் சுவர் விளம்பரம் செய்தோம். தேர்தலில் தமிழ் தேசிய கட்சி வெற்றி பெற்ற நிலையில், விளம்பரப் பணியில் என்னுடன் பணிபுரிந்த 2 பேரை இலங்கை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்துச் சென்றனர். 2 பேரும் மீண்டும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. என்னையும் பிடித்துச் சென்று விடுவார்கள் என்ற பயத்தில், இலங்கையில் இருந்து தப்பி வந்துவிட்டேன்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, பேசாளை கடற்கரையிலிருந்து பைபர் கிளாஸ் படகில் புறப்பட்டு இங்கு வந்தேன். படகு கட்டணமாக இலங்கை பணம் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். இலங்கையை சேர்ந்த படகோட்டிகள் ரஞ்சித், சிவா இருவரும் என்னை அரிச்சல்முனை கடற்கரையில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டனர். இவ்வாறு கூறினார். இவரிடம் தனுஷ்கோடி போலீசாரும், புலனாய்வுத்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply