shadow

krishna tree திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்!

ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் மட்டும் ஊற்றெடுத்து புண்ணிய தீர்த்தமாகப் பெருகிக் கிடக்கிறது. ரோம மகரிஷியின் அறிவுரைப்படி இந்தத் தலத்தில் வழிபட்ட முகுந்தன் எனும் பக்தனுக்கு சிவனார் காலபைரவராகக் காட்சியருளிய இடமே அந்த ஊற்றுப் பகுதி என்பது தலபுராணத் தகவல். இதில் நீராட, பிரம்மஹத்தி, பித்ருதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

ஒருமுறை, யுத்தம் ஒன்றில் இந்திரனுக்குத் தக்க நேரத்தில் உதவி செய்தார் ஸ்ரீகிருஷ்ணர். அதனால் மகிழ்ந்த இந்திரன் அவருக்குப் பலவகையான பரிசுகளை வழங்கினான். அவற்றுள் தேவலோக பாரிஜாத மலரும் ஒன்று. அந்த மலரை ஸ்ரீகிருஷ்ணர் ருக்மிணிக்குத் தருகிறார். நாரதமுனிவரின் மூலம் விஷயம் அறிந்த சத்யபாமா, தன் மீது பகவானுக்குப் பிரியம் இல்லை என்று கோபம் கொண்டாள். அவளைச் சமாதானம் செய்ய நினைத்த கிருஷ்ணர், பாரிஜாத மரத்தையே அவள் மாளிகையின் தோட்டத்தில் நட்டுவைத்தார். ஆனால், விதிவசமாக மரத்தின் கிளைகள் ருக்மிணியின் மாளிகைத் தோட்டத்தில் நீண்டு வளர்ந்தன.  ஆக, மரம் பாமாவுக்கும், பூக்கள் ருக்மிணிக்கும் கிடைத்ததாகக் கதை நீளும்.

krishna

இதனால், தான் உதாசீனப்படுத்தப்படுவதாக எண்ணிய பாரிஜாத மரம் ஸ்ரீகிருஷ்ணரைச் சபித்ததாம். ‘பாரத யுத்தம் முடிந்து ஆயிரம் ஆண்டுக் காலம் ஒரு மரமாக இருக்கவேண்டும்’ என்பது சாபத்தின் சாரம். இந்தச் சாபத்தை எங்கு போய்க் கழிப்பது என்று கிருஷ்ணர் கேட்க, இந்தத் தலத்தைச் சுட்டிக்காட்டியதாம் பாரிஜாத மரம். அதன்படி, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இத்தலத்துக்கு வந்து அரச மரமாகி நின்றார் என்பது ஸ்தல வரலாறு. இன்றைக்கும் கிருஷ்ணாம்சமாக வணங்கப்பட்டு வருகிறது அரசமரம்.

பிற்காலத்தில், வேடன் ஒருவனால் துரத்தப்பட்ட குரங்கு ஓன்று தப்பி ஓடிவந்தபோது, தன்னை அறியாமலேயே இந்த மரத்தை வலம் வந்தது. பின்னர் தாகம் தணிக்க, ஊற்று நீரைப் பருகியது. தொடர்ந்து, பக்தர்களோடு கலந்து ஈஸ்வரனையும் தரிசித்ததாம். அன்று, பிரதோஷம் வேறு! இப்படி, தன்னையும் அறியாமல் குரங்கு செய்த வழிபாட்டின் பலனாக, மறுபிறவியில் காஞ்சியில் ராஜ குஞ்சர அரசனாக அவதரித்ததாம் அந்தக் குரங்கு. அந்த மன்னர், பூர்வ ஜென்ம ஞாபகம் பெற்று, இத்திருத்தலத்தைப் புதுப்பித்துச் சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.

பக்தர்களும் இந்தத் தலத்துக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, அரசமரத்தை வலம் வந்து, வரமூர்த்தீஸ்வரரையும் மரகத வல்லியையும் வணங்கிவர, நினைத்தது நடக்கும்; நற்பலன்கள் யாவும் கைகூடும்.

Leave a Reply