shadow

பஞ்சாப் தாக்குதல் எதிரொலி. திருப்பதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

tirupathiபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நகரில் நேற்று பாகிஸ்தானை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் கூறியதாவது:

பாகிஸ்தான் நாட்டுடன் சுமுக உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்கதையாகி வருகிறது. நமது நாட்டின் கவுரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. எந்த நாட்டின் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தாது. ஆனால் இந்தியாவுக்கு சவால் விடுத்தால் அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

பஞ்சாப் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அந்த மாநில முதல்வர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறைச் செயலர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். தீவிரவாதி களுக்கு எதிராகப் போரிடும் போலீஸாரை நேரில் சந்தித்துப் பேசுவேன். தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து டெல்லி உள்பட நாட்டின் முக்கிய பகுதிகளில் பாகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட பல்வேறு முக்கியப் பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உட்பட முக்கிய கோயில்கள், ரயில், பஸ் நிலையங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பக்தர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் சோதனையிட்டனர். கோயிலின் முகப்பு வாசல் முன்பு ஆக்டோபஸ் போலீஸார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்குமாறு தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply