சென்னையில் 200 இடங்களில் மாநகராட்சியின் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கின. சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5 நாட்கள் மாபெரும் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று சென்னையிலுள்ள அனைத்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அனைத்து பரிசோதனை வசதிகளுடன் கூடிய (எக்கோ, ஈ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை, முழு இரத்த பரிசோதனை, கருப்பைவாய் புற்று நோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, ரத்தப் பரிசோதனைகள்) 15 முதன்மை முகாம்கள் நடத்தப்பட்டன.

முதன்மை முகாமில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். 200 முகாம்களிலும் இரத்த பரிசோதனை, காசநோய் மற்றும் மலேரியா பரிசோதனைகள் நடைபெற்றன.

மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய்களான டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் “நிலவேம்பு குடிநீர் பொடி” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகளும், பரிசோதனைகளும் கட்டணம் இல்லாமல் அளிக்கப்பட்டது. பெரும்பாலான கர்ப்பிணி பெண்களும் ஆர்வத்தோடு இந்த முகாம்களில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களுக்கு கர்ப்பகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
முகாம்களில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் காலை 7 மணி முதலே முகாம் நடைபெற்ற இடங்களில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று தங்களது உடலை பரிசோதனை செய்துகொண்டனர்.

Leave a Reply