shadow

உலக வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகார் வெளிநடப்பு

உலகில் உள்ள பல கிறுக்குத்தனமான நிகழ்வுகளில் பல பாகிஸ்தானில்தான் நடைபெறும் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இதுவரை உலகின் அனைத்து பாராளுமன்றத்திலும் எம்பிக்கள்தான் வெளிநடப்பு செய்வார்கள். ஒருசில நாடுகளில் பிரதமர் அல்லது அதிபர் வெளிநடப்பு செய்ததும் உண்டு. ஆனால் உலக வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் வெளிநடப்பு செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிப்பவர், அயாஸ் சாதிக். நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல சபையை நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது உள்துறை தொடர்பாக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அந்த துறையின் மந்திரி அசன் இக்பால் சபையில் இல்லை.

நாடாளுமன்றத்தில் எந்த துறை அமைச்சகம் தொடர்பான அலுவல் இருந்தாலும், அதன் அதிகாரிகள், நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்தில் இருக்க வேண்டும் என்பது விதி ஆகும். ஆனால் அவர்களும் சபையில் இல்லை. இது சபாநாயகர் அயாஸ் சாதிக்குக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், “எந்த நிலையிலும் நாடாளுமன்றத்தினை அவமதிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எனவே நான் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்” என கூறி விட்டு வெளியேறினார்.

மேலும், “நான் இனி எந்த அமர்வையும் தலைமை தாங்கி நடத்த மாட்டேன். நாடாளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் இருப்பார்கள் என்று பிரதமர் வாக்குறுதி அளிக்கிற வரையில், நான் சபையை நடத்த மாட்டேன்” என கூறினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply