புருனே, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகளின் 11வது உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் 8வது உச்சி மாநாடு ஆகியவை புருனேவில் நேற்று நடந்தது.

இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏசியன் நாடுகளுடன் இந்தியா ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் கோடிக்கு இருதரப்பு வர்த்தகம் செய்தது. இதை ரூ.6 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஏசியன் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா தயாராக உள்ளது. ஏசியன் நாடுகளுடனான உறவை மேம்படுத்த, ஏசியன் தலைமை செயலகம் அமைந்துள்ள ஜகார்தாவில், முழு நேர தூதருடன் கூடிய தனி தூதரகத்தை இந்தியா விரைவில் அமைக்க உள்ளது.

இந்தியாவின் பழமையான நாலந்தா பல்கலை கழகத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு கிழக்கு ஆசிய நாடுகள் ஆதரவளித்து உள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பல்கலைக் கழகம் அடுத்தாண்டு முதல் செயல்பட தொடங்கும். இதில் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் இணைவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

பீகாரில் உள்ள இந்தியாவின் மிக பழமையான நாலந்தா பல்கலைக்கழகம் அழிந்த நிலையில் இருந்தது. இதை மீண்டும் புதுப்பிக்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விரும்பினார். இதற்காக தனி மசோதா நிறைவேற்றப்பட்டது. கலாமின் கனவு திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன் வந்தன.

இத்திட்டத்துக்கு சீனா, ஆஸ்திரேலியா நாடுகள் தலா ரூ.6 கோடி அளிப்பதாகவும், சிங்கப்பூர் ரூ.30 கோடி அளிப்பதாகவும் கூறியுள்ளது. இதேபோல் இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க கம்போடியா, புருனே, நியூசிலாந்து மியான்மர் மற்றும் லாவோ நாடுகளும் முன்வந்துள்ளன. இதற்காக இந்த 7 நாடுகளுடன் ஏசியன் மாநாட்டில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது.

Leave a Reply