shadow

நாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டு

soniaநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த் மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இன்றுவரை ஒருநாள் கூட முழுமையாக, உருப்படியாக நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எந்தவித அலுவல்களையும் நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டபோதும் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில்  நாடாளுமன்றத்தின் முடக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே முழுப் பொறுப்பு என பா.ஜ.க. பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கடந்த 2010 ஆம் ஆண்டும் இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் முடங்கியது.

ஆனால், அந்த முடக்கத்தில் இருந்து 2-ஜி ஊழல் உள்ளிட்ட பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன. 2-ஜி விவகாரத்தில் பிரதமருக்கு தெரியாமல் பல பரிவர்த்தனைகள் நடைபெற்றது அம்பலத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், லலித் மோடி விவகாரத்தில் இதைப்போல் சட்டமீறல் ஏதுமில்லை.

எனினும், இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இதற்கு அரசும் சம்மதித்தது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக முதலில் ராஜினாமா, பிறகுதான் விவாதம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் குழம்பிப்போய் உள்ளது. தற்போது, நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையை நோக்கி பதாகைகளை வீசுகின்றனர்.

அதுவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கண்ணுக்கு எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர். இந்த குளிர்க்கால கூட்டத்தொடர் முழுமையாக முடக்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும், பழியையும் சோனியா காந்திதான் ஏற்க வேண்டும்” என்றார்.

Leave a Reply