shadow

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5 நிமிடங்களில் ஜாமீன் பெற்ற சோனியா-ராகுல்
sonia
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை குறித்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர்களுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஐந்தே நிமிடங்களில் ஜாமீன் வழங்கியது. வழக்கு தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே சென்றனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி நேற்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மதியம் 2.45மணிக்கு இருவரும் நீதிமன்றம் வந்தனர். 3 மணிக்கு இந்த வழக்கு ஆரம்பமானது. சரியாக ஐந்தே நிமிடங்களில் இருவரது ஜாமீன் மனு விசாரணை செய்யப்பட்டு 3.05க்கு ஜாமீன் வழங்கப்பட்டது. உடனே 3.06க்கு இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர்

முன்னதாக சோனியா, ராகுலின் ஜாமின் மனுவுக்கு மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இருவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால், அதை நீதிபதி ஏற்கவில்லை. சோனியா, ராகுல் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இதுகுறித்து நீதிபதி கூறியதாவது: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், அரசியலில் மிகவும் புகழ்பெற்ற நபர்கள். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆதலால், தலா ரூ.50,000 மதிப்பில் சொந்த ஜாமீனும், தனி நபர் உறுதியும் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். அதில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது. அடுத்த விசாரணையின்போது வழக்கு தொடர்பாக தம்மிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

ஜாமீன் பெற்று வெளியே வந்த சோனியா காந்தி, “இந்த வழக்கைத் தொடுத்தவர்களின் உள்நோக்கம் குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும். ஆனால் அதில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியபோது, “எதிர்க்கட்சியினருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி கட்டவிழ்த்து விட்டுள்ளார். “எதிர்க்கட்சிகள் அடிபணிந்து விடும் என்று மோடி நினைக்கிறார். ஆனால், நானும், காங்கிரஸும் அழிந்து விட மாட்டோம்’ என்று கூறினார்.

English Summary: Sonia and Rahul get bail within five minutes

Leave a Reply