shadow

கேரள முதல்வர் கார் மீது செருப்பு வீச்சு. பெரும் பரபரப்பு

kerala cmகேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி சென்ற கார் மீது மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் அருகே பாலராமபுரம் என்ற பகுதியில் நீச்சல்குளம் திறப்பு விழாவில் இன்று காலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அமைச்சர்கள் மாணி, முனீர் உட்பட பலர் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டிருந்தன.

கேரள நிதி அமைச்சர் மாணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் துணை அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மாணி வருவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாலராமபுரம் பகுதியில் குவிந்தனர்.

இந்த நேரத்தில் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் வந்தது. அந்த காரில் அமைச்சர் மாணி தான் காரில் வருகிறார் என்று எண்ணிய போராட்டக்காரர்கள், உம்மன் சாண்டியின் கார் மீது கருப்பு கொடியையும், செருப்புகளையும் வீசினர். அவை உம்மன் சாண்டி கார் மீது விழுந்து. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, பாதுகாப்புக்கு அங்கிருந்த போலீசார் முதல்வர் கார் மீது செருப்புகளை வீசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply