shadow

10சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் ஒரே ஆலயத்தில் இருந்தபடி நமக்கு அருள்பாலிப்பது மகா பாக்கியம். அப்படி ஆலயம் இருப்பது, நம் தமிழகத்தில் மிகமிகக் குறைவு.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு செல்லும் வழியில் உள்ளது செம்பட்டி. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது லட்சுமிபுரம். இங்கே அற்புதமான கோயிலில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர். இங்குதான் சிவனாருடன் பிரம்மாவும் விஷ்ணுவும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

தொண்டைய சாமி நாயக்கர் எனும் மன்னர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். அப்போது அவரின் கனவில் தோன்றிய சிவனார், ‘இங்கே எனக்கொரு கோயிலை எழுப்பி வழிபடுவாயாக! இந்தத் தேசம் செழிக்கும்’ என அருளினார். அதன்படி மன்னர், இந்தக் கோயிலை கட்டினார் என்கிறது ஸ்தல வரலாறு.

பாண்டிய மன்னர் ஒருவர், இந்தக் கோயிலைக் கட்டத் துவங்கி பாதியில் நின்றுவிட்டதாகவும் அதையடுத்து நாயக்க மன்னர் இந்தக் கோயிலைக் கட்டினார் என்றும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

மாதந்தோறும் விசேஷம்..!

மூலவரின் திருநாமம் – ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர். அம்பாள் – ஸ்ரீசிவகாமி அம்பாள். மாசி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடித் திருவிழா, திருக்கார்த்திகைப் பெருவிழா, நவராத்திரி, மார்கழித் திருவாதிரை என ஒவ்வொரு மாதமும் விழாக்களும் விசேஷங்களுமாக மக்கள் கூட்டத்தில் களைகட்டும் ஆலயம் இது! மகா சிவராத்திரியில் விடிய விடிய நடைபெறும் பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவராத்திரி விரதமிருந்து சிவ தரிசனம் செய்வார்களாம்!

அப்போது இந்த ஊரின் காவல்தெய்வமாக உள்ள பெட்டியை (பெட்டிக்குள் இருந்தபடி கடவுள் காப்பதாக ஐதீகம்!) எடுத்து வந்து, அதற்கும் பூஜைகள் நடைபெறும். ஸ்வாமியுடன் பெட்டியும் வீதியுலா வரும் அழகே அழகு!

குபேர பீடம்!

வேறு எந்தக் கோயிலிலும் காண்பதற்கு அரிதான சங்கநிதி மற்றும் பதுமநிதி ஆகியோரின் சந்நிதி இங்கு உள்ளது. வக்கிர தோஷத்தால் சகலத்தையும் இழந்த குபேரன், இங்கு வந்து சிவ பூஜை செய்து, கடும் தவம் செய்து, தவத்தின் பலனாக, இழந்தை செல்வங்களைப் பெற்றதாக ஐதீகம்! இதைக் குறிக்கும் வகையில் உள்ள குபேர பீடம், இங்கு விசேஷம்.

ஞானச் செல்வம் நிச்சயம்!

ஸ்ரீவிஷ்ணு சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. ஸ்ரீபிரம்மாவை வணங்கிவிட்டு, ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரரையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூமாலை சார்த்தி வழிபட்டால், புத்தியில் தெளிவு உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். குபேர பீடத்தையும் வணங்கினால், கல்விச் செல்வத்துடன் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று சுபிட்சமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!

முன்னதாக, ஸ்ரீகன்னிமூல கணபதிக்கு அருகம்புல் மாலை சார்த்தி, பேனா மற்றும் புத்தகங்களை வைத்து, வணங்கி வழிபடுகிறார்கள் மாணவர்கள்.

 

Leave a Reply