shadow

godseஇந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் விரைவில் பூமி பூஜை நடத்தப்படும் என்றும் இந்து மகாசபை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் கடந்த 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தியை டெல்லியில் சுட்டுக்கொலை செய்தார். இதனையடுத்து அவருக்கு 1949ஆம் ஆண்டு நவம்பர் 8ஆதேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியான ஒரே வாரத்தில் கோட்சே தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாக இந்து மகா சபை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு வெளிவந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் கோட்சேவின் கோவிலுக்கு  இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்து மகாசபை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் முன்னாகுமார் சர்மா கூறுகையில், ”லக்னோ புறநகர், ஹைதர் கஞ்ச் என்ற இடத்தில் கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அந்தப் பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து கொடுத்துள்ளனர். விரைவில் அங்கு பூமி பூஜை நடைபெறும்.

மேலும், வருகிற ஜனவரி 30 ஆம் தேதிக்குள் இங்கு கோட்சேயின் மார்பளவு சிலை நிறுவப்படும். அன்றைய தினம் கோட்சேயின் தியாகத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்படும்” என்றார்

Leave a Reply