கலாச்சார பாதுகாப்பு பேசுபவர்கள் முதலில் கடற்கரையை சுத்தப்படுத்துங்கள்: சின்மயி ஆவேசம்

நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மாறி மாறி ஒருமையில் விமர்சனம் செய்தும், அவருக்கு பயமுறுத்தல் விடுத்தும் வருகின்றனர். அமைச்சர்களின் இந்த போக்கிற்கு தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகி சின்மயில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

‘‘நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கருத்து கூறி இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும், பணத்துக்காக அவர் எதையும் செய்வார் என்றும், கையில் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்றும் குறை கூறியுள்ளார். கமல்ஹாசன் நடத்தி வரும் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் வி‌ஷயத்தில் வரலாறு படைத்து இருக்கிறது.
அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதுவா கலாசார சீரழிவு? 40 வருடங்களுக்கு முன்பு கிராம பகுதிகளில் கோவில் விழாக்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், தெருக்கூத்துகளும் மட்டுமே நடந்தன. ஆனால் இப்போது கோவில் விழாக்களுக்கு சென்று பாருங்கள். அங்கு ரிக்கார்டு டான்சுகளும், வீடியோ படங்களையும் தான் பார்க்க முடியும். அது ரொம்ப கலாசார முன்னேற்றமா? அதுவும் கோவில்களில்..

கலாசார பாதுகாப்பு என்று பேசுவதாக இருந்தால் கடற்கரையை சுத்தப்படுத்துங்கள். அங்கு சாமானியர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு கண்கூசும் காட்சிகளை பார்க்க வேண்டி இருக்கிறது.
கமல்ஹாசன் மிக சிறந்த நடிகர். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று இருக்கிறார். அவரை நீங்கள் மூன்றாம் தர நடிகர் என்று ஒருமையில் கூறுகிறீர்கள். உங்கள் அமைச்சர் பதவியின் கண்ணியம் ஒப்பிட முடியாதது. பிரபலமாக இருப்பவரை பற்றி இப்படி பேசி இருப்பது அறுவெறுக்கத்தக்கது. சந்தர்ப்பவசமானது.

ரஜினிகாந்தும் அமைப்புகள் ஊழல்மயமாகிவிட்டது என்று கூறி இருக்கிறார். அவருக்கு ரசிகர் பலம் உள்ளது. மத்திய அரசும் அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது. அதனால் அவரை பற்றி பேசவில்லை. கலைஞர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான். கருத்து கூறும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஒரு அமைச்சராக அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். முதல்–அமைச்சரிடமாவது விவாதித்தது உண்டா?
சட்டவிரோதமாக மணல் எடுப்பவர்கள் பற்றி கேள்வி கேட்டது உண்டா? சாதியை சொல்லியும் கமல்ஹாசனை அவமதித்து இருக்கிறீர்கள். அது அவருக்கு பொருந்தாது. கமல்ஹாசன் பெரியார் கொள்கைகளை பின்பற்றி வாழ்கிறார். ஒரு ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்று பேசுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *