shadow

sikaram thoduநேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்து வேலையில் இருக்கும்போதே ஒரு காலை இழந்ததால் போலீஸில் இருந்து விலகும் சத்யராஜ். தான் போலீசாக இருந்து சாதிக்க முடியாததை தனது மகன் விக்ரம் பிரபு சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீஸ் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் அப்பா சத்யராஜின் ஆசைக்காக அவ்வப்போது போலீஸ் டிரைனிங் செல்வது போல நடிக்கிறார்.

இந்நிலையில், வடநாடுகளுக்கு புனித யாத்திரை செல்லும் தாத்தாவுடன் செல்லும்விக்ரம் பிரபு அங்கு தற்செயலாக மோனல் கஜ்ஜாரை பார்த்து காதலிக்கிறார்.  

விக்ரம் பிரபுவுவை போலவே மோனல் கஜ்ஜாருக்கும் போலீஸ் வேலை என்றால் பிடிக்காது என்பதால் இருவருக்கும் இடையே எளிதில் காதல் பற்றிக்கொண்டது. இந்நிலையில் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் வேலையில் சேர அழைப்பு வருகிறது. அப்பாவின் விருப்பத்தை தட்ட முடியாமல் போலீஸ் வேலையில் சேருகிறார். ஆனாலும் இந்த விஷயம் மோனலுக்கு தெரியாமல் பாதுகாத்து வருகிறார். .

இந்நிலையில் மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் விக்ரம் பிரபுவின் காதல் விஷயம் அவருக்கு தெரிந்து விடுகிறது. சத்யராஜின் நண்பராக இருந்தும் அவர் விக்ரம் பிரபுவின் காதலை பிரிக்க நினைக்கின்றார்.

இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.

அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.

படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.

இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

போலீஸ் உடையில் கம்பீரம், காதல் காட்சிகளில் இளமை மற்றும் ஒரு சுறுசுறுப்பான விக்ரம் பிரபுவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. கதை தேர்வு, கேரக்டர் தேர்வு என கச்சிதமாக இருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.

மோனல் கஜ்ஜாரின் நடிப்பும் ஓகே ரகம். முதலில் விக்ரம் பிரபுவுடன் மோதல் பின்னர் காதல் செய்யும் மோனல், சீரியஸ் காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் கொஞ்சம் திணறுகிறார்.
சத்யராஜின் வழக்கமான கம்பீர நடிப்பை இதில் மீண்டும் பார்க்க முடிகிறது.

நகைச்சுவைக்கென ஒரு கூட்டமே உள்ளது. சதீஷ், கோவை சரளா, மற்றும் அவருடன் நடித்தவர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர்
 ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.

 இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.

மொத்தத்தில் சிகரத்தை தொட்டு ஹாட்ரிக் அடித்துள்ளார் விக்ரம் பிரபு.

Leave a Reply