shadow

விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் குடியரசுத் தலைவராக சிவசேனா ஆதரவு

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று, சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் இந்த முயற்சிக்கு தமிழக எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வலுத்துவருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்பு மனுதாக்கல் தொடங்கி, 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், இதுவரை, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை.

இதுபோன்றே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மவுனமாக உள்ளன. இதனால், குடியரசுத் தலைவர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனை, குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சிவ சேனா கட்சி இந்த கோரிக்கையை தற்போது வலுவாக முன்வைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் தரப்பில் மோகன் பகவத்தை குடியரசுத் தலைவராக்க முயற்சி எடுக்கப்படுவதால், சிவ சேனாவும் களத்தில் இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக, சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, விரைவில் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மோகன் பகவத்தை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழிந்ததும் சிவசேனா கட்சிதான். ஆனால், அதில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், எம்எஸ் சுவாமிநாதனை நிறுத்த சிவ சேனா விரும்புவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply