மம்தா பெற்றதுதான் உண்மையான வெற்றி. ஜெயலலிதாவின் வெற்றி வெற்றியல்ல. சீமான்

seemanதமிழக சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்திய நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிட்ட தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பெற்ற வெற்றி குறித்து கருத்து கூறிய சீமான், ஜெயலலிதா பெற்றது உண்மையான வெற்றி அல்ல. பணம் கொடுத்த பெற்ற வெற்றி அது. மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி பெற்றதுதான் உண்மையான வெற்றி’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள் களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.

தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன். அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும் தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்பது தவறு. தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற்றது தான் உண்மையான வெற்றியாகும். சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. வாக்குச் சாவடி முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் கூட உள்ளது.

ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதலமைச்சராக இருந்தபோது இதை நிறைவேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டுமல்ல, மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறைவேற்ற போவதில்லை.

தமிழகத்தில் வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்குகளில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பரப்பப்பட்டு அவர்களது செல்வாக்கை சரிக்கும் செய்திகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தெரியாது. அதுகுறித்து கவலைப்படுபவர்களுக்கு தான் பிரச்னை. நான் கவலைப்படுவது இல்லை”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *