shadow

‘சவாலே சமாளி’ திரைவிமர்சனம்
savale samali
சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து பேர் வாங்கிய நடிகர் அசோக் செல்வன். கழுகு’ இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இரண்டாவது படமான ‘சவாலே சமாளி’ படத்தில் ரொமாண்டிக் ஹீரோவாக முயற்சி செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறுவாரா? என்பதை தற்போது பார்ப்போம்.

டாப் டிவி என்ற டிவியை நடத்தும் கருணாஸ், ரூ.3 கோடி கடனுடன் சேனலை நடத்த முடியாமல் திண்டாடுகிறார். இந்நிலையில் இந்த டிவியில் புதிதான வேலைக்கு சேரும் அசோக்செல்வன், உடன் வேலை செய்யும் ஜெகனுடன் இணைந்து சேனலை பிரபலமாக்க முயற்சி செய்கின்றனர். இடையில் தங்கையின் தோழி பிந்துமாதவியை அசோக்செல்வன் காதல் செய்கிறார்.

சேனலை பிரபலமாக்க உண்மையான காதலர்களை பெற்றோர்களின் சம்மதத்துடன் சேர்த்து வைக்கும் ஒரு லைவ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிவு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்தும் எந்த காதலர்களும் சேனலிடம் வந்து உதவி கேட்காததால், இவர்களே செட்டப் காதலர்கள் மற்றும் செட்டப் பெற்றோர்களை ஏற்பாடு செய்து ஊர்வசி மற்றும் மனோபாலாவை வைத்து நிகழ்ச்சியை நடத்துகின்றனர். எதிர்பார்த்ததைபோலவே நிகழ்ச்சி பிரபலமாகி, கருணாஸுக்கு பணம் கொட்டுகிறது.

இந்நிலையில் பிந்துமாதவி தன்னுடைய தோழி ஒருவரின் காதலை இந்த நிகழ்ச்சியின் உதவியுடன் சேர்த்து வைக்கும்படி கேட்கிறார். அதுவரை செட்டப் நிகழ்ச்சி என்று பிந்துமாதவியிடம் மறைத்து வந்த அசோக்செல்வன், பிந்துமாதவியின் தோழி காதலை சேர்த்து வைக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால் காதலர்களின் பெற்றோர்கள் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி என்பதையும் ரெளடி என்பதையும் தெரிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இந்த காதலை சேர்த்து வைத்தால் தங்கள் உயிரே போய்விடும் என பயந்து ஊரை விட்டு ஓட முயற்சிக்கும்போது பிந்துமாதவி பேசும் ஒரு வீர வசனத்தால் மனம் மாறி காதலர்களை சேர்த்து வைக்க ஒரு திட்டம் போடுகின்றனர். இந்த திட்டம் நிறைவேறியதா? அரசியல்வாதியும் ரெளடியும் இவர்களிடம் ஏமாந்தார்களா? உண்மையான காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் கதை.

அசோக்செல்வன் படம் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்தாலும் கதையே இல்லாமல் ஓடும் படத்தில் இவர் என்னதான் நடித்தாலும் அது எடுபடாமல் போகிறது. இருந்தாலும் இவரை பொருத்தவரை காதல், காமெடி காட்சிகளில் சிறப்பாகவே செய்துள்ளார்.

பிந்துமாதவி ஹீரோயின் என்பது டைட்டில் கார்டில் போட்டதால்தான் ஆடியன்ஸ்களுக்கு தெரிகிறது. மற்றபடி இந்த படத்தில் இவர் வரும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஜெகன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருந்தாலும் ஓகே ரகம். படத்தில் உண்மையிலேயே சிரிக்க வைத்த ஒரே ஒருவர் என்றால் அது ஊர்வசி மட்டுமே. காதலர்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ? அவ்வளவு கிண்டல் செய்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், நாசர், கருணாஸ், மற்ற அனைவரின் நடிப்பு ஓகே ரகம்.

இயக்குனர் சத்யசிவா, இந்த படத்தின் கதையை நகர்த்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் இந்த படத்தில் கதை என்பதே சுத்தமாக இல்லை.  இயக்குனர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான காட்சி அமைப்புகளை யோசித்திருக்கலாம். கடைசி கால் மணி நேரத்தில் காட்டிய அக்கறையை படம் முழுவதும் செலுத்தியிருந்தால் படம் உண்மையில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ஆனால் சொதப்பலான காட்சி அமைப்புகளால் படம் மிக மெதுவாக நகர்கிறது. தமன் இசையில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை.

மொத்தத்தில் சவாலே சமாளி படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஒரு ஏமாளி என்பது மட்டும் உறுதி

Leave a Reply