shadow

Mahalingam

மதுரை:சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகினர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி சபரிமலை போல் சதுரகிரிமலையில் ரூ.4 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் மேற்குதொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஆடி அமாவாசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கு வருவர். வனத்துறை சார்பில் மூன்று அடி பாதையை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

வனப்பாதுகாப்பு சட்டப்படி மலைக்கு சுலபமாக செல்ல அகலமான பாதை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை.சதுரகிரிமலையில் 38 ஆண்டுகளுக்கு பின் மே 16 ல் திடீர் கோடை மழை கொட்டித்தீர்த்தது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி எட்டு பக்தர்கள் பலியாகினர். எதிர்காலத்தில் அசம்பாவித சம்பவங்களால் உயிர் பலியை தடுக்கும் பொருட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் போல் சதுரகிரியில் சீரமைப்பு பணிகளை செய்ய இந்து அறநிலைத்துறை உத்தரவிட்டுஉள்ளது.

கோயில்களின் இணை கமிஷனர் ஆர்.பச்சையப்பன் கூறியதாவது:

சதுரகிரி கோயிலில் ரூ.45 லட்சத்தில் அன்ன சத்திரம், தலா ரூ.45 லட்சத்தில் இரு தங்குமிடங்கள், ரூ.42 லட்சத்தில் சுந்தரமகாலிங்கம் மற்றும் பாலாவடி கோயில்களில் முடிக்காணிக்கை கட்டடங்கள், ரூ.49 லட்சத்தில் கழிப்பறை கட்டடங்கள், ரூ.47 லட்சத்தில் குளியலறைகள் மற்றும் பாலாவடி கோயில் அருகே கழிப்பறைகள் உட்பட இதர பணிகளுக்காக ரூ.4 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஆடி அமாவாசைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரிமலையில் மழை பெய்தால் அல்லது வேறு சம்பவங்கள் நடந்தால் அடிவாரத்தில் உள்ள ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து பக்தர்களை மலைக்கு வராமல் தடுக்க வசதியாக கோயில் ஊழியர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்படும். மலைப்பாதையில் ஒலிபெருக்கி மற்றும் அலாரங்கள் பொருத்தப்படும்.

இதன் மூலம் தட்பவெப்ப நிலை, மழை மற்றும் ஆபத்து குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும். இப்பணி ஓரிரு வாரங்களில் நிறைவடையும். பாலாவடி கோயில் பின்புறம் வழியாக ஆற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. மலைப்பாதையை அகலப்படுத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றார்.

Leave a Reply