shadow

ரூ.10,000 பரிசு வேண்டுமா? சசிகலா போஸ்டர் மீது சாணி அடிப்பவரை பிடியுங்கள்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக கடந்த வாரம் பதவியேற்றார். சசிகலா இந்த பொறுப்பினை ஏற்றதற்கு அதிமுகவின் நிர்வாகிகள் முழு ஆதரவு கொடுத்தபோதிலும், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை அவர்களால் வைத்து பார்க்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் சசிகலாவின் ப்ளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் ஆகியவற்றை கிழித்தும், அவற்றின் மீது சாணி அடித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா பேனர் மீது சாணி அடிப்வர்களை பிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு தருவதாக நெல்லை மாநகர மாவட்ட ஜெ பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர மாவட்ட ஜெ பேரவையின் வாஸ்ட் அப்பில் செய்தியில் ,” மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் நல்லாசியோடு சின்னம்மா கழகப் பொதுச்செயலாளராக தலைமையேற்று நடத்தும் அ.தி.மு.க.வின் ஆற்றல் மிக்க தொண்டர்களே. நமது கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சியால் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தில் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதலுடன் செயல்படும் வன்முறையாளர்களின் செயல்களைத் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது.

குறிப்பாக, நமது கட்சியினர் வைக்கும் ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்துபவர்களை அடையாளப்படுத்தும் பணியினைச் செய்ய நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு சின்னம்மாவின் படங்களை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் பணியில் நாம் அனைவருமே இணைந்து செயல்படுவோம். இதற்காக இரவில் நாம் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். ஃபிளக்ஸ் போர்டுகளைச் சேதப்படுத்தும் வன்முறையாளர்களைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply