அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 92ம் ஆண்டு சங்க பரிவார் இந்து அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாகவும் அதனை மீண்டும் கட்டுவோம் என பாஜ கூறி வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த இடத்தை 3 ஆக பிரித்து வழங்க உ.பி. ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக போலீஸ் டிஜிபி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மாநில உள்துறை செயலாளர் சர்வேஸ் குமார் மிஸ்ரா கடிதம் அனுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏறுபடுத்தியது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டுவதை சமாஜ்வாடி கட்டி அங்கீகரிக்கிறதா என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அச்சுப்பிழை காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாக மாநில அரசு சமாளித்தது. நடந்த தவறுக்கு உள்துறை முதன்மை செயலாளர் ஆர்எம்.ஸ்ரீவத்சவா வருத்தம் தெரிவித்தார். இந்த சமாதானத்தை முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து உள்துறை செயலர் மிஸ்ரா நேற்று முன் தினம் இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். அவர் மீது துறை விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் செக்ஷன் ஆபிசர் பிரேம் குமார் பாண்டேவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply