இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாதத்தில் தான். பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோயில்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் புரட்டாசி மாத வழிபாடு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும், காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா… கோபாலா… கோவிந்தா… என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.

பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன், காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடி மகிழ்கிறோம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.

இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பின்போது கன்னி ராசியில் புதன் உச்ச பலத்துடன், சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். மேலும் சனீஸ்வரர் துலா ராசியில் உச்ச பலத்துடன் இருக்கிறார். ஆகையால் இவை மிகவும் சிறப்பு மிக்கவை. இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும். அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *