shadow

giant-footprints

செஞ்சி அருகே உள்ள மலைப் பகுதியில், சமண முனிவர்கள் தவம் இருந்த தடயங்களை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மலைப் பகுதியில்.. புதுச்சேரியைச் சேர்ந்த, அகிம்சை நடை அமைப்பினர், புராதன தொல்லியல் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் அகிம்சை நெறி வளர்த்தல் பணிகளை செய்து வருகின்றனர். இதன் அமைப்பாளர் ஸ்ரீதரன், கல்வெட்டியல் அறிஞர் வெங்கடேசன், செஞ்சி குமார் ஆகியோர், சமண தடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, வெள்ளாமை கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் ஆய்வு நடத்திய ஸ்ரீதரன், கல்வெட்டியல் அறிஞர் வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது:மதுரைக்கு இணையாக செஞ்சி பகுதியிலும், சமணம் தழைத்து விளங்கியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.மலைக் குன்றுகளில் உள்ள இயற்கையான குகை தளங்களில் சமண முனிவர்கள் தங்கியிருந்த இடங்கள், அறம் உரைத்த பள்ளிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆகார தானம், புகலிட தானம், கல்வி தானம், மருத்துவ தானம் என, நான்கு வகை தானங்கள் நடைபெற்றன.செஞ்சி தாலுகா, அப்பம்பட்டில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளாமை மலைப் பகுதியில், சமண முனிவர்கள் தவம் இருந்த தடயங்கள், மலை அடிவாரத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு குன்றுகளில் காணப்படுகின்றன.

கிழக்கு நோக்கி பாதங்கள் அமைந்துள்ள இரண்டு குன்றுகளும், 50 அடி இடைவெளியில் அமைந்துள்ளன. இரண்டு அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக, இந்த பாதங்கள் விளங்குகின்றன; இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.ஒரு குன்றில் உள்ள பாதங்களின் நடுவில் வட்ட வடிவில் பூவும், மற்றொரு பாதத்தில் மென்மையான கோட்டுருவமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பாதங்களுக்கு அருகில், துறவிகள் தவம் இருந்த இருக்கையும், இயற்கையாக அமைந்த ஒன்றரை அடி அகலம், ஆறடி நீளம் கொண்ட படுக்கையும் உள்ளது.குன்றின் எதிர்புறம், 300 அடி தூரத்தில், கிழக்குப் பகுதியில், பாதி உடைந்த நிலையில் கல்வெட்டு ஒன்று உள்ளது.வெள்ளக்குளம், மண்டபம் மற்றும் பாதங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், தவறி சேதப்படுத்துவோர், வாரிசுகள் இன்றி ஒழிந்து போவர் எனவும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த பாத வழிபாட்டு சான்றுகள், கி.பி., 8ம் நூற்றாண்டுக்கு முந்தையவை.இவ்வாறு, ஸ்ரீதரன் மற்றும் வெங்கடேசன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply