shadow

salmankhan 100மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என காலை தீர்ப்பு வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார்.

3 ஆண்டுகளுக்கு மேல் சல்மான்கானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், தீர்ப்பு வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றமே ஜாமீன் அளிக்க முடியாது. எனவே சல்மான்கான் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தைதான் அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் அபா சிங்,  சல்மான்கான் வழக்கில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் இந்தியா மென்மையான நாடு என்று பலர் கருதும் எண்ணத்திற்கு மாறாக சட்டத்துக்கு முன் யாரும் பெரிய ஆள் இல்லை என்பதை இன்றைய தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சல்மான்கான் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தினால் தனது காலை இழந்த அப்துல்லா ரவுப் ஷேக் என்பவர் தீர்ப்பு குறித்து கூறியபோது, “கடந்த 13 ஆண்டுகளாக என்னை யாருமே வந்து பார்க்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. என் குடும்பத்தை காப்பாற்ற ஒற்றை காலுடன் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும், சல்மான்கான் மீது எனக்கு எவ்வித குரோதமும் இல்லை. இன்னும்கூட அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்க்கிறேன்.

சல்மானை தண்டித்தால் எனக்கு எந்த வகையிலும் நியாயமோ, லாபமோ கிடைக்கப் போவதில்லை. எனது துண்டிக்கப்பட்ட ஒருகால் மீண்டும் உடலோடு வந்து சேரப்போவதில்லை. எனது கஷ்டமும், பிரச்சனைகளும் தீர்ந்து விடப்போவதில்லை. அவரை தண்டிப்பதைவிட எங்களுக்கு இழப்பீடு தந்தால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது’ என்று கூறினார்.

இதே கார் விபத்தில் சிக்கி பலியான நூருல்லா மெஹ்பூப் ஷரிப் என்பவரின் மனைவி இந்த தீர்ப்பு குறித்து கூறியபோது, ‘எங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். பணவீக்கமும், விலைவாசியும் உயர்ந்துப் போயுள்ள இன்றைய நிலையில் இந்த பணத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்? என் மகனுக்கு ஏதாவது ஒரு வேலைக்கு வழி செய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்று கூறுகிறார்.

Leave a Reply