ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜக்கிதேவ்: தூத்துகுடி மக்கள் அதிர்ச்சி

பெரிய வியாபாரத்தை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தின் தற்கொலை என ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ள கருத்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான கருத்து என்பதால் தூத்துகுடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அதன் 100வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் இன்னமும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசு அந்த ஆலையை மூடி சீல் வைத்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜக்கி வாசுதேவ், “நான் ஒன்றும் காப்பர் உருக்காலை விஷயத்தில் நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா காப்பர் மிக அதிக பயன்பாட்டை உடைய நாடு என எனக்கு தெரியும். நாம் நமக்கான காப்பரை நாம் உற்பத்தி செய்யாவிட்டால், அதன் விளைவு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். பெரிய நிறுவனங்களை, வியாபாரத்தை முடக்குவது இந்திய பொருளாதார தற்கொலையாகும்.” என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் ஸ்டெர்லைட் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசிய ராம்தேவ், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கக் கூடாது, அது துரதிஷ்டவசமானது என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *