shadow

LRG_20151008101632050148

சபரிமலையில் புதிதாக ஐம்பொன் பதிக்கப்பட்ட 18 படிகளின் பிரதிஷ்டை மற்றும் அபிஷேகம் வரும் 16-ம் தேதி காலையில் நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை வரும் 15-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.சபரிமலையில் மிகவும் புண்ணியமாக கருதப்படுவது 18 படிகளில் ஏறிசென்று ஐயப்பனை வழிபடுவது தான். விரதமிருந்து இருமுடி கட்டு தலையில் ஏந்தி செல்பவர்கள் மட்டுமே படிகளில் ஏற முடியும். இதில் உள்ள ஐம்பொன் தகடுகள் சேதம் அடைந்ததால், புதிய தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைய உள்ளது. வரும் 16-ம் தேதி காலை 10 முதல் 10.30- மணிக்குள் புதிய படிகளுக்கான பிரதிஷ்டை மற்றும் கலசாபிஷேகம் நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை 15-ம் தேதி மாலை 5.30-க்கு திறக்கிறது. அன்று மாலையில் படிகளில் சுத்தி கிரியைகள் நடைபெறும்.

இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 16-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து தேவசம்போர்டு சார்பில், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். 10 மணிக்கு படிபிரதிஷ்டை சடங்குகள் தொடங்கும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை ஐந்து மணிக்கு நடை திறந்து 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின், படிபூஜை நடைபெறும். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 15, 16 தேதிகளில் வருபவர்கள் இரவு படிபூஜைக்கு பின்னரே 18-ம் படிவழியாக செல்ல முடியும். ஏற்கெனவே புதிய படிகளில் பிரதிஷ்டைக்காக 16-ம் தேதி நடை திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 17-ம் தேதி பிரதிஷ்டைக்கு உகந்த நாள் அல்ல என தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பரிந்துரைத்ததை தொடர்ந்து 15ம் தேதி நடை திறந்து 16-ம் தேதி பிரதிஷ்டை நடத்த தேவசம்போர்டு அனுமதி வழங்கியது.16 ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின், 17 ம் தேதி காலையில் நடை திறக்காது. மாலை 5.30-க்கு நடை திறக்கும். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. 18 -ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று காலை 7.30 மணிக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும்.22-ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

Leave a Reply