shadow

192

சபரிமலையில் மகர ஸங்க்ரமண நேரத்தில், ஐயப்பனுக்குச் சார்த்துவதற்காக பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும். வருடத்தில் 56 நாட்களுக்குத்தான் வெளியே கொண்டு வரப்படும் திருவாபரணம் வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தள அரண்மனையின் பொறுப்பில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக அரசர் உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். வானில் கருடன் வந்து திருவாபரணத்தை வட்டமிட்ட பிறகுதான், திருவாபரண யாத்திரை புறப்படும். இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள்.

பந்தளம் அரண்மனையிலிருந்து தலைச்சுமையாகப் புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண, வழியெங்கும் விளக்கேற்றி சாதிமத பேதமின்றி பக்தர்கள் காத்திருந்து வரவேற்பார்கள். சுமார் மூன்று நாட்கள் காட்டுவழியில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானை வட்டத்தை அடையும்போது பரவசம் ஏற்படும். சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சன்னிதானம் அடைவதைக் காண கண்கோடி வேண்டும். ஐயப்பனுக்குத் திருவாபரணம் சார்த்திக் காணக் கிடைக்கும் தரிசனம் கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதான ஒரு தரிசனம்!

அந்த ஆபரணங்களைக் குறித்து அறிய, பல பக்தர்களுக்கும் ஆர்வம் இருக்கும் அல்லவா? சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன இந்த ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தளராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் ஆகும்.

திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும்போது மொத்தம் மூன்று பெட்டிகளாக வரும். அவை 1. திருவாபரணப் பெட்டி, 2. வெள்ளிப் பெட்டி, 3. கொடிப்பெட்டி. இதில் திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சன்னதியை அடையும். மற்ற இரண்டு பெட்டிகள் மாளிகைப்புறத்தம்மன் சன்னதிக்குச் சென்று விடும்.

gallerye_020726525_164873

1. திருவாபரணப் பெட்டி

ஐயப்பன் சன்னதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில், தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளது.

திருமுகம்(சாஸ்தாவின் முகக் கவசம்)
ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி)
வலிய சுரிகை (பெரிய கத்தி)
செறிய சுரிகை (சிறிய கத்தி)
யானை, விக்ரஹம்-2
கடுவாய் புலி விக்ரஹம் 1
வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு
பூர்ணா புஷ்கலா தேவியர் உருவம்
பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)
நவரத்தின மோதிரம்
சரப்பளி மாலை
வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)
மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)
எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

2. வெள்ளிப் பெட்டி

மாளிகைபுறம் சன்னதிக்குச் செல்லும் இந்த வெள்ளிப்பெட்டியில், தங்கக்குடம் ஒன்று மற்ற பூஜா பாத்திரங்கள் இந்தத் தங்கக்குடத்தால் சுவாமிக்கு பின்னர் நெய்அபிஷேகம் செய்யப்படும்.

3. கொடிப்பெட்டி

மாளிகைப்புறம் சன்னதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில், யானைக்கான நெற்றிப்பட்டம் தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்
குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கான பொருட்கள் உள்ளன. கொடிப்பெட்டியில் உள்ளவற்றால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு, மாளிகைப்புறத்து தேவி சரம்குத்தி வரையில் யானையில் பவனி வருவாள்.

இந்த திருவாபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி, ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல! திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும். மகர நட்சத்திரம் உதித்து வானில் கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்களை ஐயப்பனுக்குச் சார்த்தி தீபாராதனை நடப்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்தக் கணமே பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் கிடைக்கும் நேரம். அதுவே பரவசத்தின் எல்லை.

Leave a Reply