சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தவறில்லை. கேரள அரசு அறிவிப்பு

Sabarimala-கேரளாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 5 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த தடையை விலக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் கடவுள், ஆண்-பெண் என பாகுபாடு பார்க்காத போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தடை வியப்பை அளிக்கிறது என்றும் இதுகுறித்து கேரள அரசு கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்றது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது? என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியான நிலையில் நேற்று டெல்லியில் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் இதுகுறித்து கூறியதாவது:-

சபரிமலை கோவில் தொடர்பான வழக்கில், அந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் இடதுசாரி கூட்டணி அரசு கடந்த 2007-ம் ஆண்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. ஒரு கோவிலில் நுழைவது என்பது மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் தொடர்பான வி‌ஷயமாகும். இது தொடர்பாக மக்கள் சமூகத்துடன் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *