நாளை இரவு முதல் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பெய்யக்கூடிய மழைஅளவில் பெரும்பகுதி மழையை கொடுக்கக்கூடியது வடகிழக்கு பருவமழை காலம். அப்படிப்பட்ட வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வருடம் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. இனிமேலாவது மழை பெய்யவேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வங்கக்கடலில் உருவான புயல்களாலும் பெரிய அளவில் மழை இல்லை.

மழைக்கு பதிலாக குளிர் அடிக்கத்தொடங்கி உள்ளது. ஏதோ மார்கழி மாதம் தான் பிறந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு குளிர் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மிகத்தீவிரமாக இருந்த லெஹர் புயல் பலவீனம் அடைந்து தீவிர புயலாக 27ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு மாறியது. இரவு 11:30 மணிக்கு அது மேலும் வலு இழந்து வெறும் புயலாக மாறியது.  அது மேலும் பலவீனம் அடைந்து நேற்று காலை 5:30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. அது மேலும் மேற்கு வடமேற்கில் நகர்ந்து பகல் 2 மணிக்கு மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. அது பலவீனமாக கரையைக் கடந்ததால் பெரிய தாக்கம் ஏதும் இல்லை. காற்றும் வேகமாக வீசவில்லை. லெஹர் புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த மழையும் வராது. நாளை இரவு முதல் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என்றார்.

Leave a Reply