shadow

திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க திடீர் நிபந்தனைகளை விதித்த ரிசர்வ் வங்கி

marriage-stock-imageகடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். செல்லாத பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாற்றி வருகின்றனர்.

ஆனால் போதுமான அளவுக்கு வங்கியில் இன்னும் பணம் வரவில்லை. எனவே வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு பின்னர் வங்கியில் இருந்து வாரத்திற்கு ரூ.24000 எடுத்துக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தேவையான பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.

இந்நிலையில் திருமண வீட்டார் தகுந்த ஆவணங்களை காட்டி ரூ.2.50 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் அறிவித்தார். ஆனால் தற்போது திடீரென இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருமண வீட்டார் நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மட்டுமே எடுக்க முடியும். டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன் நடக்கும் திருமணத்துக்கு மட்டுமே பணம் எடுக்க முடியும்.

திருமண அழைப்பிதழ் மண்டப செலவு ரசீது ஆகியவற்றை அளிக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே ரொக்கமாக பணம் வழங்கப்படும். பெற்றோர் அல்லது திருமணம் செய்யும் நபர் இவர்களில் ஒருவருக்கு மட்டுமே 2.50 லட்சம் வழங்கப்படும்.

பணம் எடுக்க விண்ணப்பிக்கும்போது மணமகன் மற்றும் மணமகள் பெயர்கள், அவர்களுக்கான அடையாள சான்றுகள், முகவரிகள் மற்றும் திருமண தேதியை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

Leave a Reply