shadow

hundi moneyஇந்தியாவில் அமைந்துள்ள கோவில்களில் அதிக வருமானம் தரும் கோவில்களில் மிகவும் முக்கியமானது கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலும் ஒன்று. இங்கு வருடந்தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கள் காணிக்கைகளை உண்டியலில் கோடிக்கணக்கில் செலுத்துகின்றனர்.

கோடிக்கணக்கில் குவியும் காணிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வைத்து எண்ணுவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்களுக்கு இரட்டை சம்பளமும், கண்காணிப்பும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு ரோபோ எந்திரங்கள் வடிவமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினை அணுகிய கோவில் நிர்வாகிகள் உண்டியல் பணத்தை எண்ணும் ரோபோ ஒன்றை வடிவமைக்க ஆர்டர் கொடுத்தனர். இதன்படி தற்போது  அந்த நிறுவனம் ரோபோவை வடிவமைத்துள்ளது.

இதன்படி கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் கன்வேயர் பெல்ட் மூலம் இணைக்கப்பட்டு, உண்டியலில் விழும் பணம் முழுவதும் இந்த கன்வேயர் பெல்ட் மூலம் தனி அறைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்குள்ள கருவி உண்டியல் பணத்தில் ரூபாய் நோட்டுக்களை தனியாகவும், நாணயங்களை தனியாகவும் வெளிநாட்டு பணத்தை தனியாக பிரித்தெடுக்கும். பின்னர் அவை அனைத்தும் எந்திரங்கள் மூலமே எண்ணப்பட்டு, அவற்றின் மதிப்பு குறிக்கப்படும். ஆன்லைன் மூலம் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அதிகாரிகள் பார்க்க முடியும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க எந்திரங்கள் மூலமே நடக்கும். மனிதர்கள் யாரும் இதற்கு தேவைப்படமாட்டார்கள். இந்த ரோபோ கருவியை பொருத்த ரூ.9 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply