shadow

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது. ஜி.ராமகிருஷ்ணன்

9தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலிலுக்கு வந்து எம்.எல்.ஏ, எம்பி ஆகிய பதவிகளில் வகித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஓய்வுக்கு பின்னர் தலைமை தேர்தல் ஆணையர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

‘இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில், திருப்பூரில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கக் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப, எம்.பி. இடம் வழங்கினால் பொருத்தமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். பல நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்பு பதவி வகிப்போர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு, அரசியலுக்கு வரக்கூடாது. தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

சிவகங்கை தொகுதியில் 2009-ம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அவர் அந்த ஐந்தாண்டு கால பதவியை முடித்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றுக் கொள்கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. பிரச்சினைகளுக்கான தீர்வும் உள்ளது. தனியார் பெரு நிறுவன மருத்துவமனைகளின் பிடியில் மருத்துவம் சிக்கியுள்ளது.

சுகாதாரக் கொள்கையில் தனியார்மயம் என்பதே அரசின் நிலைப்பாடு. இதில் அதிமுக, திமுகவுக்கு வித்தியாசமில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், உயர்க் கல்வியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வரலாம் என்பதை ஏற்க முடியாது. தனியார்மயத்தால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உயர்க் கல்வி கிடைக்காமல் போகும்.

சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் இடதுசாரிகளுக்கு மாற்றுக் கொள்கை உள்ளது.

ஆனால், பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாம் ஒரே மாதிரியான முதலாளித்துவ கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றன. பணம் கொடுத்து மக்களை நிரந்தரமாக விலைக்கு வாங்கிவிட முடியாது. நிச்சயம் மாற்றம் ஏற்படும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.

Leave a Reply