shadow

பங்குச்சந்தைகளின் சரிவால் முதலீட்டாளர்கள் கவலை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
share
கருப்பு திங்கள் என்று பங்குச்சந்தையில் கூறப்பட்ட தினமான கடந்த ஆகஸ்ட் மாதம் 24தேதி தொடங்கிய பங்குச்சந்தை சரிவு இன்னும் நிற்கவில்லை. தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை சரிந்து கொண்டே செல்வதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். புதிய முதலீட்டாளர்கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டாலும், ஏற்கனவே பெருமளவு முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்வதால், மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து பங்குச்சந்தை சர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பெரும்பாலான முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று பங்குச்சந்தை முடிந்தபோது சென்செக்ஸ் 562 புள்ளிகள் சரிந்து 25201 புள்ளியில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 2014ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பங்குச்சந்தை எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தற்போது உள்ளது.  அதேபோல நிப்டி 167 புள்ளிகள் சரிந்து 7655 புள்ளியில் முடிவடைந்தன. நிப்டி கடந்த 2014 ஆகஸ்ட் 11 ஆம் தேதி இருந்த நிலையில் வர்த்தகமாகியுள்ளது. ஒருவருடம் பின்னோக்கியுள்ள இந்த பங்குச்சந்தை எப்போது முன்னேறும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வர என்ன காரணம்?

இந்திய பங்குச்சந்தையில் இருந்த அந்நிய முதலீடு அதிகமாக வெளியேறியதே பங்குச்சந்தை சரிவுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டு நிலவரங்களும் சரியில்லாததால் பங்குச்சந்தை சரிவு ஏற்படுகின்றது. பருவமழை குறைவு, குறைவான விவசாய உற்பத்தி ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இத்தனைக்கும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரியில் இருந்த பிரச்சினை களையப்பட்ட போதிலும் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

மேலும் இந்திய பங்குச்சந்தை இந்த சரிவோடு நிற்காது என்றும் இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பெரும்பாலான வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் இன்னும் 4 சதவீதம் வரை பங்குச்சந்தை சரியலாம். முதலீட்டாளர்கள் இப்போது முதலீடு செய்வதை விட இன்னும் சில நாட்களுக்கு சந்தையின் போக்கினை கவனிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பி.எஸ்.இ. பேங்கெக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 3.5 சதவீதம் என்ற நிலையில் சரிந்திருந்தாலும் பேங்கெக்ஸ் 6.5 சதவீதமாக சரிந்திருக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த 13 வங்கி பங்குகள் தங்களுடைய 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாயின. இதில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பெடரல் பேங்க், கனரா வங்கி உள்ளிட்ட 13 வங்கி பங்குகள் 52 வார குறைந்த விலையில் வர்த்தகமாயின.

அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தன. ரியால்டி(3.32%), இன்பிரா (3.24%) மின்சாரம் (3.03%) ஆகிய குறியீடுகள் சரிந்து முடிந்தன.

ஆகஸ்ட் மாதத்தில் 16877 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருந்தாலும் நடப்பு மாதத்தின் முதல் மூன்று வர்த்தக தினங்களில் 2,650 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது.

நேற்றைய சரிவினால் முதலீட்டாளர்களுக்கு 1.92 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது பி.எஸ்.இ. சந்தை மதிப்பு 93.83 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

Leave a Reply