இந்திய ராணுவத்தின் தியாகத்தை சந்தேகிப்பதா? டெல்லி முதல்வருக்கு மத்திய அரசு கண்டனம்

aravind kejriwalஉரியில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதை அடுத்து இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்களை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன. ஏன் ரஷ்யாவே இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் உள்ள டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தாக்குதல் குறித்து சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ‘‘‘தீவிரவாத முகாம்களை அழிக்க துல்லிய தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டுகிறேன். அதே சமயம் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளும், ஐ.நா. பார்வையாளர்கள் குழுவின் அறிக்கையும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றன. இது தொடர்பாக பிரதமர் ஆதாரங்களை வெளியிட்டு பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்’’ என்று கூறினார்

இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

நமது ராணுவத்தின் தியாகம், வீரம், அசகாய தலைமை ஆகியவற்றை எவ்விதத்திலும் சிறுமைப்படுத்தக் கூடாது. பாகிஸ்தானின் பொய்யான பிரச்சாரத்தை நம்பி, கேஜ்ரிவால் இப்படி கேள்வி எழுப்பியிருப்பது மிகுந்த மனவலியை தருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் ஊடகங்கள் எதை வேண்டுமென்றாலும் தெரிவிக்கட்டும். இந்தியாவில் உள்ள ஒரு மாநில முதல்வர் அந்தச் செய்திகளை எப்படி நம்பலாம். இந்திய ராணுவத்தை சந்தேகிக்கும் வகையில் எப்படி ஆதாரத்தை கேட்கலாம். அரசியலில் நாம் வேறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அந்த வேறுபாடு நமது ராணுவத்தை காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *