shadow

elephantதாய்லாந்து நாட்டில் யானைப்பாகனைக் கொன்றுவிட்டு, ரஷ்ய நாட்டு பெண் சுற்றுலாப் பயணியையும் அவரது மகளையும் முதுகில் சுமந்தபடி காட்டுக்குள் யானை ஒன்று ஓடிவிட்டதாக வந்த செய்தியை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள முவாங் மாவட்டத்தில் புவாரா என்ற சுற்றுலா முகாம் உள்ளது. அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யானை மீது சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கிருந்த 18 வயது ஆண் யானை ப்ளாய் மீயூ, ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணியும் அவரது 8 வயது மகள் ஆகிய இருவரையும் முதுகில் சுமந்துகொண்டு வனப்பகுதிக்குச் சென்றது. அந்த யானையை 60 வயது யானைப்பாகன் சூக் சுப்மார்க் என்பவர் வழிநடத்திச் சென்றார்.

இந்நிலையில் திடீரென அந்த யானைக்கு மதம் பிடித்து, ஆக்ரோஷமாக பாகனை மிதித்துக் கொன்றுவிட்டு, அந்த 2 பேரையும் முதுகில் சுமந்தபடி வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. ரஷ்ய பெண்ணும் அவரது மகளும் அலறியபடியே யானையின் மேல் உட்கார்ந்திருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகன்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், போலீஸார், அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று யானையைத் தேடினர். அப்பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட் அருகே பனை மரக் காட்டில் சுற்றித் திரிந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு, 2 சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே, பாகன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் இருந்த அவரது சடலம் மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply