shadow

sagayamகிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயம் குழுவினர்களுக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ள்து எனபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:”

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அதன் இடைக்கால அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவையாகும்.

அவரது அறிக்கையில் விசாரணைக்கு உதவுவதற்காக நான் கோரிய ஜெயசிங் ஞானதுரை என்ற அதிகாரியை அனுப்பாமல் தமிழக அரசு தாமதம் செய்தது. கடந்த 9ஆம் தேதி தான் அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. விசாரணைக்குழுவின் செலவுக்காக அரசிடமிருந்து பணம் பெறுவதில் பல தடைகள் இருந்தன.

இந்த ஊழல் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் நான் பல தகவல்களை கோரியிருந்தேன். ஆனால் அவர்கள் இதுவரை அந்த தகவல்களைத்தரவில்லை. இதனால் விசாரணை மிகவும் தாமதம் ஆனது என்று சகாயம் குற்றம் சாற்றியிருந்தார்.

கிரானைட் கொள்ளை தொடர்பான விசாரணைக்கு தமிழக அரசும், அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,‘‘மதுரை மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் குவாரி உரிமையாளர்கள் கொள்ளையடித்து விட்டனர். அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. இதுகுறித்து விசாரிக்கும் சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்.

அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். உச்ச நீதிமன்றம் காட்டிய வழியில் தமிழகத்திலுள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடை செய்து விடுவோம் என்று எச்சரித்துள்ளார்.

கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கர்நாடத்தில் 2006 முதல் 2010 வரையிலான 4 ஆண்டுகளில் சட்ட விரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு முதல் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இந்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருந்தற்காக பின்னாளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் முதல்அமைச்சர் பதவியிலிருந்து விலக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பின்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கைதியாக 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கு கிரானைட் ஊழல் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதை சென்னை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply