ramdoss statementதிருப்பதி செம்மர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது போல ஏற்கனவே மேலும் பல தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டார்களா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் உண்மைகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பவையாக உள்ளன. இப்படுகொலையை நடத்திய ஆந்திரக் காவல்துறையினர் மனிதர்களாகவே இருக்கத் தகுதியற்றவர்கள்; அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் என்ற கருத்தை இவை உறுதி செய்துள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேருமே செம்மரக் கடத்தலுடன் சம்பந்தப்படாதவர்கள்; கட்டிட வேலை செய்வதற்காகச் சென்ற அவர்களை, பேருந்தை பாதியில் நிறுத்தி இறக்கியும், வேறு இடங்களில் தங்கி இருந்த போது பிடித்துச் சென்றும் தான் ஆந்திரக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பாகவும், கொல்லப்பட்டதற்குப் பிறகும் தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடுமையான சித்திரவதைக்கு  உள்ளாக்கியுள்ளனர். கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதன் அடையாளம் தான் அவர்களின் உடல் முழுவதும் காணப்படும் வெட்டுக் காயங்கள். கொல்லப்பட்டதற்குப் பிறகும் கூட அவர்களின் உடல்கள் மீது அமிலம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை ஊற்றி சிதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை ஏதோ இறந்த விலங்குகளின் உடல்களை கையாளுவது போன்று குப்பைகளை அள்ளும் ஊர்தியில் ஒன்றாகக் குவித்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இலங்கை இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை சிங்களப் படையினர் எப்படியெல்லாம் சிதைத்தும், போராளிகளின் உடல் உறுப்புகளை வெட்டி வீசியும் தங்களின் வெறியை தணித்துக் கொண்டார்களோ, அதற்கு ஆந்திரக் காவல்துறையின் வக்கிரமான, மிருகவெறித் தாக்குதல் சற்றும் குறைந்ததல்ல. சாதாரணமான சூழலில், இதயமே இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஒரு கொடூரமான தாக்குதலை நடத்த மாட்டார்கள். ஆனால், ஆந்திரக் காவல்துறை இப்படி ஒரு செயலை செய்ததுடன், அதை தங்களின் சாதனையாகக் காட்ட முயல்வதையும், அதற்கு ஆதரவாக ஆந்திர அரசு செயல்படுவதையும் பார்க்கும்போது, இதன் பின்னணியில் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும்  எதிராக மிகப்பெரிய வன்மத்தை ஆந்திர ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இத்தகைய வன்மம் இல்லாவிட்டால் இவ்வளவு கொடூரமான கொலையையும் உடல்களை சிதைக்கும் வேலையையும் ஆந்திர காவல்துறை செய்திருக்காது என உறுதியாக நம்பலாம்.

அதேபோல், ஆந்திரக் காவல்துறைக்கு பகைமையும், வன்மமும் இருந்தால் இது நிச்சயமாக முதல்  படுகொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் உறுதியாக கூறமுடியும். திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆந்திராவுக்கு கட்டிட வேலைக்காகச் சென்ற  நூற்றுக்கணக்கானோர் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என்று அவர்களின் உறவினர்கள்  கூறியிருப்பது இந்த சந்தேகத்தை உறுதி செய்கிறது. இவர்களும் ஆந்திராவின் வனப் பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தை அடியோடு ஒதுக்கி விட முடியாது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களை செம்மரம் கடத்தும் ஆந்திர கும்பல்கள் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

எனவே, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற கூலித் தொழிலாளிகளின் நிலை என்ன? என்பது குறித்து விரிவான விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளார்களா? மரம் கடத்தும் கும்பல்களால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது  படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்களா? என்பதை தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக நேர்மையான காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பல்துறை விசாரணைக் குழுவை தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைக்க வேண்டும்”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *