shadow

மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள். ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ramdoss statement
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் விட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”  தமிழ்நாட்டில் வறட்சியால் நெற்பயிர்கள் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். கர்நாடகத்தின் இந்த சுயநல மற்றும் பிடிவாத அணுகுமுறை இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சம்பா பயிர்கள் முற்றிலுமாக கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காவிரிப் பிரச்னையில் கடைபிடித்து வரும் மவுனத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதேபோல், இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கடைபிடித்து வரும் அணுகுமுறை பொறுப்பற்றதாகும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடன் பிரதமரை சந்தித்து முறையிடுவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இனியாவது இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்பி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply