shadow

குரூப்-1ல் கூடுதல் மதிப்பெண்ணுக்கு விலை ரூ.15 லட்சம்! டிஎன்பிஎஸ்சி ஊழல் குறித்து ராமதாஸ் புகார்

குட்கா உள்பட தமிழக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது குரூப் 1 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதற்கும் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில், பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு நிர்வாகத்துக்கு திறமையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வில், திட்டமிட்டு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 21 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள் என, 74 குரூப்-1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் 2015-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்தத் தேர்வுகளுக்கு சில மாதங்கள் முன்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, தகுதியற்ற பலர், முறைகேடான வழிகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தத் தேர்வுகளை மிகவும் நேர்மையாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை, ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அருள்மொழி செய்திருந்தார். இதனால், அந்தத் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்பட்டது.

எனினும், அதன்பின்னர் நான்கு மாதங்களாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது செல்லாது என்று பா.ம.க தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதிசெய்தது. அதன் பின்னர், குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வாணையத் தலைவர் பலமுறை முயன்றும் அதற்குப் பல்வேறு திசைகளிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இத்தகைய சூழலில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட 11 பேரில்… ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், சுப்பையா, பாலுச்சாமி ஆகிய ஐவரும் ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களே மீண்டும் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த இரு வாரங்களில்… அதாவது மே 5-ம் தேதி, தேர்வாணையத்தின் தலைவர் அருள்மொழி திடீரென இரு மாத விடுப்பில் செல்கிறார். அவர் தானாகச் சென்றாரா அல்லது விடுப்பில் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் விடுப்பில் சென்ற ஒரு வாரத்தில், அதாவது மே 12-ம் தேதி, குரூப்-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்படுகின்றன. முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற 148 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் நேர்காணல்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு அழைக்கப்பட்டுள்ள 148 பேரில் பெரும்பான்மையானோர் தகுதி இல்லாதவர்கள் என்றும், முதன்மைத் தேர்வு முடிவுகளில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர்களாக உள்ள சிலரும், போட்டித்தேர்வு பயிற்சி மையம் நடத்தும் சிலரும் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்த முறைகேட்டைச் செய்துள்ளனர். தகுதியும் திறமையும் இல்லாத சிலரின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு, மோசடிசெய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, சிலரிடமிருந்து ரூ.1 கோடி வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேர்காணலில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான பேரங்களும் நடைபெற்றுவருவதாகவும், இதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்வாணையத்தின் தலைவராகப் பணியாற்றி வரும் அருள்மொழி நேர்மையானவர், அப்பழுக்கற்றவர் என்பதில் எந்த ஐயத்துக்கும் இடமில்லை. அரசு நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகளை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதற்காக அவர் போராடினார்; அதில் ஓரளவு வெற்றியும்பெற்றார். ஆனால், அவர் விடுப்பில் சென்ற நேரத்தில், விடைத்தாள்களை மாற்றி மோசடிசெய்யப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில், மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, முக்கியமான காலகட்டத்தில் இரு மாத விடுப்பில் சென்றது ஏன்? அவர் சொந்தக் காரணங்களுக்காக விடுப்பில் சென்றாரா, முறைகேடுகளைச் செய்வதற்கு வசதியாக விடுப்பில் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டாரா. முதன்மைத் தேர்வு முடிந்த ஒன்பது மாதங்களில் அதன் முடிவுகளை வெளியிட அருள்மொழி பலமுறை முயன்றபோதும், அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது உண்மையா. அப்படியானால், அதற்குக் காரணம் யார். அருள்மொழி விடுப்பில் சென்ற ஒரு வாரத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளை, அவர் பணியில் இருந்தபோதே வெளியிட்டிருக்க முடியாதா. முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக அருள்மொழியிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். எனவே, குரூப்-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை ரத்துசெய்துவிட்டு, அதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply