ஜெயலலிதா அறிவித்த மின்மிகை நாடகம் அம்பலமாகிவிட்டது. ராம்தாஸ்
ramdoss
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் தருணத்தில் இருப்பதாகவும், தமிழக அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்கள், நீண்ட காலத்துக்கான மின் விநியோகத் திட்டங்கள் மூலம் தமிழகம் மின் மிகையை எட்டும் தருவாயில் உள்ளதாகவும் கூறினார். ஆனால் தமிழக மின்நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பதை புள்ளிவிவரங்கள் விளக்குவதால் தமிழக அரசின் மின்மிகை நாடகம் அம்பலமாகிவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:  தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் மின் தேவையை நிறைவேற்றத் தேவையான அளவுக்கு மின் திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் தவறியதன் பயனாக கடந்த 9 ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

காற்றாலைகள் மூலம் அதிக அளவில் மின்னுற்பத்தி செய்யப்படும் போது சில மாதங்கள் மட்டும் மின்வெட்டு குறைவதும், அதன்பின் மீண்டும் மின்வெட்டு உச்சத்தை அடைவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைத்ததால் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது.

கடந்த 21 ஆம் தேதி 365 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது. இது 23 ஆம் தேதி 2333 மெகாவாட் ஆகவும், 24 ஆம் தேதி 2171 மெகாவாட் ஆகவும் அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக 975 மெகாவாட் மின்வெட்டு நிலவியது. தமிழகம் முழுவதும் இன்றும் கடும் மின்வெட்டு நீடிக்கிறது.

காற்றாலைகள் மூலம் 2,000 மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்சாரம் கிடைத்த போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. மாறாக காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட்டுக்கும் கீழ் குறையும் போது மின்வெட்டு அதிகரிக்கிறது.

மின் தேவையை சமாளிக்கும் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வில்லை என்பதும், காற்றாலைகள் தான் கைகொடுக்கின்றன என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. கடந்த ஒன்றாம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “மின்துறையில் தமிழகம் தன்னிறைவு பெறும் அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் எனது அரசு அளப்பறிய சாதனைகளை படைத்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் கடந்த நான்கரை ஆண்டுகளில் 5954 மெகாவாட் மின்சாரம் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் “தமிழக மக்களுக்கு தரமான மற்றும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கப்பெற்று வருகிறது” என்று பெருமிதத்துடன் கூறினார். ஆனால், அவரது வார்த்தைகள் உண்மையல்ல என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.

தமிழக மின்நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பதை தெளிவான புள்ளிவிவரங்களுடன் என்னால் விளக்க முடியும்.

உதாரணமாக நேற்று முன்நாள் 24 ஆம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவை 13,058 மெகாவாட் ஆகும். ஆனால், ஒட்டுமொத்தமாக 11,633 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேரடியாக உற்பத்தி செய்த மின்சாரத்தின் அளவு 4422 மெகாவாட் (அனல் மின்சாரம் 2885, நீர் மின்சாரம் 1262, எரிவாயு மின்சாரம் 275 மெகாவாட்) மட்டும் தான். நெய்வேலி மற்றும் மத்திய மின்தொகுப்பிலிருந்து 2196 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இவை தவிர 4731 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தில் 799 மெகாவாட் மின்சாரம் 6 நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 3219 மெகாவாட் அதிகபட்சமாக ரூ.6.00 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. 713 மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறைந்த விலையில் காற்றாலைகளிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்றைய மின்னுற்பத்தி நிலவரமும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்திருக்கிறது.

ஒரு மாநிலம் சொந்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிக மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்குவதற்காக வெட்கப்பட வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி விட்டதாகக்கூறி மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட சொந்தமாக திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படவில்லை. மாறாக வெற்று அறிவிப்புகள் தான் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் 10,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டம், எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் ஆகிய இரு மின் திட்டங்களுக்கு மட்டும் தான் ஒப்பந்தம் விடப்பட்டது. அவற்றிலும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. மற்றொரு எண்ணூர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டும் பணிகள் தீவிரமடையவில்லை.

உடன்குடி மின்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஒப்பந்த நடைமுறையையே ரத்து செய்ததன் மூலம் அத்திட்டம் மேலும் தாமதமாகும் நிலையை ஏற்படுத்தியது அ.தி.மு.க. அரசு தான்.

மின்திட்டங்களை செயல்படுத்தாமல் விளம்பரங்கள் மூலமாக மாயையை ஏற்படுத்தி வந்த அ.தி.மு.க. அரசின் நாடகம் இப்போது கலைந்து விட்டது. மக்களை ஏமாற்றிய அ.தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்களே சரியான பாடம் புகட்டுவர்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *