shadow

ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைய முடியுமா? ராம்மோகன் ராவ்

முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்தனர். இதன் காரணமாக தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம்மோகன் ராவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராம்மோகன் ராவ் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் திடீரென தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு அவர் பூரண குணம் அடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் சற்று முன்னர் ராம்மோகன் ராவ், செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வருமான வரித்துறை சோதனை வாரண்ட்டில் தன்னுடைய பெயர் இல்லை என்று தெரிவித்த ராம்மோகன் ராவ், வருமான வரி சோதனையின்போது துணை ராணுவத்தினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும், துப்பாக்கியை காட்டி வருமான வரித்துறையினர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சோதனையில் 40-50 சவரன் தங்கம் மற்றும் 1,12,320 ரூபாய்களை மட்டுமே வருமான வரித்துறையினர் கண்டுபிடித்ததாகவும், வேறு எதுவும் இந்த சோதனையின் போது கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்திற்குள் சி.ஆர்.பி.எப் நுழைய தைரியம் இருந்திருக்குமா? என்று கேள்வி கேட்ட அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

32 ஆண்டுகள் அனுபவமுள்ள அரசு அதிகாரியை இப்படி நடத்துவது சரியா? என்று கேள்வி எழுப்பிய ராம்மோகன் ராவ், தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் நிர்வாக ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை என்றும் கூறினார். மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply