shadow

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு?

rajya sabhaமாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 11ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதிமுக 4 வேட்பாளர்களையும், திமுக 2 வேட்பாளர்களையும் அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு செயலாளர் நவநீத கிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் விஜய குமார் ஆகியோர்களும், தி.மு.க. வேட்பாளர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர்களும் சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதாக  4 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்த போதிலும் ஒவ்வொரு வேட்பாளரையும் 10 எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை செய்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 4 சுயேட்சை வேட்பாளர்களை எந்த எம்.எல்.ஏக்களும் பரிந்துரை செய்யாததால் இவர்களுடைய மனுக்கள் நாளை தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எனவே போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply