ரஜினிமுருகன். திரைவிமர்சனம்

rajinimuruganசிவகார்த்திகேயனின் தாத்தா ராஜ்கிரண் மதுரையில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊரில் யாருடனும் பகை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று எண்ணி தனது பிள்ளைகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

இதில், ஒரேயொரு மகனான ஞானசம்பந்தம் மட்டும் மதுரையிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஞானசம்பந்தத்தின் மகன்தான் சிவகார்த்திகேயன். இவர் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர் சூரியுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்.

அதேஊரில் நாயகி கீர்த்தி சுரேஷை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷின் அப்பாவும், சிவகார்த்திகேயனுடைய அப்பாவும் பழைய நண்பர்கள். சிவகார்த்திகேயன் சிறுவயதில் செய்த சிறு தவறால் இவர்கள் பகையாளியாக மாறியிருக்கிறார்கள்.

இருந்தாலும், சிறுவயதிலேயே இருவீட்டாரும் சிவகார்த்திகேயனுக்கும், கீர்த்திக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருப்பதால், குடும்ப பகையை முடிவுக்கு கொண்டு வந்து, கீர்த்தி சுரேஷை எப்படியாவது தனது மனைவியாக்க வேண்டும் என்ற நினைப்பில் சிவகார்த்திகேயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஆனால், கீர்த்தி சுரேஸோ இவரை கண்டுகொள்வதில்லை.

அவளை கவர்வதற்காக சிவகார்த்திகேயன் பல்வேறு சேட்டைகளை செய்கிறார். ஒருகட்டத்தில், சிவாவின் சேட்டைகள் கீர்த்திக்கு பிடித்துப்போகவே அவளும் காதலிக்கத் தொடங்குகிறாள். இந்த விஷயம் கீர்த்தியின் அப்பாவுக்கு தெரிய வந்ததும், இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்நிலையில், ராஜ்கிரண் தனது பேரன் சிவகார்த்திகேயன் பெயருக்கு சொத்துக்களை எழுதி வைக்க, வெளிநாட்டில் இருக்கும் மற்ற மகன்களை கிராமத்துக்கு அழைக்கிறார். ஆனால், அவர்கள் இதற்கு சம்மதிக்காமல் வெளிநாட்டிலிருந்து வர மறுக்கின்றனர். இருந்தும், ஒருசில விஷயங்களை செய்து அவர்களை வரவழைக்க பார்க்கிறார் ராஜ்கிரண்.

இதற்கிடையில், அதேஊரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வரும் சமுத்திரகனி, ராஜ்கிரணின் மற்றொரு பேரன் என்றும், தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சண்டைக்கு வருகிறார். ஆனால், ஊரார் யாரும் இதனை ஏற்க மறுக்கின்றனர். ஆனால், சமுத்திரகனி தான் ராஜ்கிரணின் பேரன் என்பதை நிரூபிக்கிறேன் என்று அவர்களிடம் சவால் விடுகிறார்.

இறுதியில், சமுத்திரகனி ராஜ்கிரணின் பேரன்தான் என்பது உறுதியானதா? குடும்ப பகையை தீர்த்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமே சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வாரிக் கொடுத்தது. அந்த வரிசையில இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்கும் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு இந்த படத்தில் இவருடைய தோற்றம் மற்றும் நடிப்பு அழகாக இருக்கிறது. சூரியும், இவரும் இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது. சூரியின் காமெடி இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க தாவணியில் கிராமத்து பெண்ணாக வலம் வந்து கலக்குகிறார். இவர் பேசும் மதுரை பாஷையை மறுபடியும் மறுபடியும் கேட்கத் தோன்றுகிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். இதுதான் இவருக்கு முதல்படம் என்றாலும், நடிப்பில் கைதேர்ந்தவர் போல் நடித்திருக்கிறார்.

ராஜ்கிரண் மதுரை மண்ணுக்கு எப்போதுமே கச்சிதமாக பொருந்துவார். அதுபோல், இந்த படத்திலும் அந்த மண்ணின் மணம் மாறாமல் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக வரும் ஞானசம்பந்தமும் தனக்கே உரிய பாணியில் காட்சியமைப்புக்கு வலு சேர்த்திருக்கிறார்.

வில்லனாக வரும் சமுத்திரகனி பார்க்கும் பார்வையே அனைவரையும் மிரட்டுகிறது. அதேபோல், வசனங்களை ஆக்ரோஷமாக பேசும் இடங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இயக்குனர் பொன்ராம் மீண்டும் ஒரு காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த படத்தை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன், சூரியை வைத்துக்கொண்டு படத்தின் முதல் பாதி முழுவதையும் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார். பிற்பாதியில் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு சிறு இடத்தில் கூட போரடிக்கும்படியான காட்சிகள் இல்லாமல் உள்ளது இவரது திரைக்கதையின் பலம். கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு எல்லோரும் குடும்பத்தோடு ஜாலியாக சென்று பார்க்கக்கூடிய படமாக இது இருக்கும்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு மதுரையை ரொம்பவும் கலர்புல்லாக காட்டியுள்ளது.

மொத்தத்தில் ‘ரஜினி முருகன்’ நம்பி போங்க… சந்தோஷமா இருங்க….

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *