9

நேற்று நடைபெற்ற கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘செளந்தர்யாவை நான் இன்னும் குழந்தையாகவே பார்க்கிறேன். அவள் முதன்முதலில் ஆக்ஷன் என்று சொன்னதும் சிரித்துவிட்டேன். பிறகு கே.எஸ்.ரவிகுமார் வந்து ஆக்ஷன் சொன்னதும்தான் நடித்தேன் என்று கூறினார். மேலும் பெண்களுக்கு படங்கள் இயக்குவதை விட மிகவும் முக்கியமானது குடும்பத்தை கவனிப்பதுதான். முதலில் குடும்பத்தை நன்றாக கவனியுங்கள்.அப்போதுதான் நாட்டிற்கு நல்ல குடிமக்கள் கிடைப்பார்கள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியவதாவது: “”இந்த விழாவுக்கு நான் நன்றி சொல்வதற்காகவே வந்தேன். படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுவேன். எனக்கு ராஜா–ராணி கதை என்றால் ரொம்ப இஷ்டம். 150 படங்களில் நான் நடித்திருந்தாலும், ராஜா–ராணி கதையில் நடிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. ஆண்டவன் புண்ணியத்தில் பணம்–புகழ் நிறைய சம்பாதித்து இருக்கிறேன். எல்லாமே தமிழக மக்கள் கொடுத்தது.

‘ராணா’ படத்தின் கதை இருபது வருடங்களாக எனக்குள் இருந்தது. அந்த கதையை படமாக்க முயன்றபோதுதான் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்தபோது, ‘ராணா’ படத்தில் நடிக்கிற அளவுக்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை.

அப்போதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதையை கே.எஸ்.ரவிகுமார் என்னிடம் சொன்னார். அந்த கதை, ‘ராணா’வை விட, ரொம்ப பிடித்தது. இந்த படத்தை ‘மோஷன் கேப்சரிங்’ டெக்னாலஜியில் பண்ணலாம் என்றார்கள். எனக்கு ‘டெக்னாலஜி’ எல்லாம் தெரியாது. இதுவரை யாருமே செய்திராததை, தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்புக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

‘மோஷன் கேப்சரிங்’ டெக்னாலஜியில் படம் எடுக்க ஐந்தாறு வருடங்கள் ஆகும். ரூ.200 கோடி வரை செலவாகும் என்று சிலர் சொன்னார்கள். நாம் திட்டமிட்ட பட்ஜெட்டிலேயே படத்தை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையூட்டியவர், முரளி மனோகர். அதன்பிறகே முயற்சியில் இறங்கினோம்.

இந்த படம் எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டம் என்று வாயால் சொல்ல முடியாது. முழு படத்தையும் நான் பார்த்தேன். நிச்சயமாக படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்கள் எல்லோரையும் சந்திப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் இது நடக்கணும். நடக்கும்.

ஐஸ்வர்யாவுக்கும், சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டேன். இரண்டு பேரையும் அவர்களின் கணவர்களும், மாமனார்–மாமியார்களும் தங்கள் குழந்தைகளாக கருதி, ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றபின், பத்து பதினைந்து வருடம் கழித்து படம் எடுங்கள்.

சவுந்தர்யாவை நான் குழந்தையாகவே பார்த்து விட்டேன். இந்த படத்துக்காக அந்த பெண் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள். அவள் முதன்முதலாக என் முன்னால் நின்று, ஆக் ஷன் என்று சொன்னபோது, எனக்கு சிரிப்பு வந்தது. அப்புறம் ரவிகுமார் வந்து, ஆக் ஷன் சொன்னார். சவுந்தர்யா, கட் மட்டும் சொன்னாள். இந்த படத்தின் வெற்றி விழாவில், உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்” என்று கூறினார். இந்த விழாவில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலசந்தர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply