shadow

நான் அரசியலுக்கு வருவதும், வராததும் கடவுள் கையில் தான் உள்ளது. ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்த விவாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் இதுகுறித்து எப்போதும்போல தெளிவில்லாத ஒரு அறிவிப்பைத்தான் ரஜினி கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வருவதும் வராததும் கடவுளின் கையில் உள்ளது என்றும், ஒருவேளை அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக உண்மையாக இருப்பேன்’ என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் விபத்து என்று கூறும் அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான் ஒரு கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து என்னை வாழ வைக்கும் தெய்வங்களான பொதுமக்கள் அந்த கூட்டணியை ஏற்று கொண்டு வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த நிகழ்வை அடுத்து ஒருசில எனது ரசிகர்கள் சில அரசியல்வாதிகளிடம் தொடர்பு வைத்து கொண்டு ஒவ்வொரு தேர்தலின்போது நான் அவர்களை ஆதரிப்பதாக கூறி ஆதாயம் பெற்றார்கள். அரசியல்வாதிகளும் அவர்களை பயன்படுத்தி கொண்டார்கள். இதன் காரணமாக ஒருசில தேர்தலின்போது நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று கருத்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் ஒரு பெரிய அரசியல் தலைவரோ, சமூக நல ஆர்வலரோ, பெரிய ஆளோ கிடையாது. என்னுடைய ஆதரவை தேடி பல அரசியல் கட்சிகள் எனக்காக காத்திருந்ததார்களா? என்றால் அதுவும் கிடையாது. என் பெயரை சொல்லி யாரும் வாக்கு கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் அந்த அறிவிப்பை நான் ஒவ்வொரு தேர்தலின்போது வெளியிடுகிறேன்.

அந்த ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கை உள்ளது. அந்த ஆண்டவனின் கருவி தான் நான். தற்போது கடவுள் என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். இன்று நடிகனாக உள்ளேன். நாளை என்ன பொறுப்போ அதை ஏற்றுக்கொள்வேன். கடவுள் நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும் அந்த பொறுப்பில் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன். இப்பொழுது நடிகனாக எப்படி நியாயமாக இருக்கின்றேனோ அதேபோல் நாளை எந்த பொறுப்பிற்கு வந்தாலும் நியாயமாக இருப்பேன்.

ஒருவேளை கடவுள் என்னை அரசியல்வாதியாக மாற்றினால், கண்டிப்பாக கண்டிப்பாக தவறான ஆளுங்களை கிட்டகூட சேர்க்க மாட்டேன்’ இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Reply