shadow

rainகடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தீபகற்பம் பகுதியில் உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு பிறகும், தென் மாவட்டங்களில் மழை தொடரலாம்.

இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 11 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 7 செ.மீ., திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, வேலூர் மாவட்டம் கலவை ஆகிய இடங்களில் 6 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வேலூர் மாவட்டம் சோளிங்கர் மற்றும் ஆம்பூர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஆகிய இடங்களில் 5 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, ஈரோடு, விழுப்புரம், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பதிவானது.

பரவலாக மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பம் சற்று தணிந்து குளிர்க்காற்று அடிக்க தொடங்கியுள்ளது மதுரையில் 36.5 டிகிரி, பாளையங்கோட்டையில் 35.5 டிகிரி, திருச்சியில் 35.1 டிகிரி, சேலத்தில் 35 டிகிரி, கரூரில் 34.8 டிகிரி வெயில் பதிவானது. சென்னையில் இன்று காலை லேசான மற்றும் மிதமான மழை நகர் முழுவதும் பெய்து வருகின்றது.

Leave a Reply